This Article is From Sep 20, 2019

Tax Cut: கார்ப்பரேட் வரி குறைப்பு 130 கோடி இந்தியர்களின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி

Corporate tax cut: இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடு என்ற சூழலை உருவாக்க அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tax Cut: கார்ப்பரேட் வரி குறைப்பு 130 கோடி இந்தியர்களின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி

Corporate tax cut: நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

New Delhi:

கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது என்பது 130 கோடி இந்தியர்களின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 ட்ரில்லயன் டாலராக கொண்டு வருவதே இலக்கு என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், கடந்த சில நாட்களாக இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனிடேய, பொருளாதார நிலையை சீர்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக, தொழில் முனைவோர்களுக்கு ஏற்கெனவே பல சலுகைகள் அறிவித்த நிலையில், தற்போது மேலும் சில சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான அனைத்து செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களையும் உள்ளடக்கிய கார்ப்பரேட் வரி 25.17 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த புதிய வரி விகிதமானது நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து கணக்கிடப்படும். எந்தவொரு ஊக்கத்தொகையும் சலுகையும் பெறாவிட்டால், உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 22 சதவீதமாக இருக்கும். 
 


இதேபோல் புதிய நிறுவனங்களுக்கும் வரி குறைக்கப்படுகிறது. புதிய நிறுவனங்கள் 17.01 சதவீதம் மட்டும் கார்ப்பரேட் வரி செலுத்தினால் போதும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவமானது. இது மேக் இன் இந்தியாவை சிறந்த வகையில் ஊக்குவிக்கும். உலக அளவில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும். தனியார் துறையில் போட்டிகளை அதிகரிக்கச் செய்து, வளர்ச்சியை ஏற்படுத்தும். புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும். இதன் முடிவு 130 கோடி இந்தியர்களுக்கு வெற்றியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடு என்ற சூழலை உருவாக்க அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும், சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது அரசின் லட்சியம் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

.