'வரலாற்று அநீதியை சரி செய்யத்தான் CAA கொண்டு வரப்பட்டுள்ளது' - பிரதமர் மோடி பேச்சு

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் இந்த செயலில் ஈடுபடுகின்றன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக பேசியுள்ளார்.

New Delhi:

வரலாற்று அநீதியை சரி செய்யத்தான் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது என்றும் அவர் கூறினார். 

டெல்லியில் நடைபெற்ற என்.சி.சி. விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது-

நேரு - லியாகத் உடன்படிக்கை சிறுபான்மையினரை பாதுகாப்பது குறித்து பேசுகிறது. காந்திஜியும் இதைத்தான் விரும்பினார். இந்தியா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தை வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. அவைகள் ஆண்டை நாடுகளில் நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அராஜகங்களை கண்டுகொள்வதில்லை.

சிலர் தாங்களெல்லாம் தலித் மக்களின்  உரிமைக்காக போராடுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மை தலித்துகள் துன்புறுத்தப்படுகின்றனர். மத ரீதியாக துன்புறுத்தப்படும் அவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து விடுகின்றனர். 

மத்திய அரசு எடுக்கும் முடிவுகளால் வெளிநாட்டில் எனது புகழ் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன. நான் ஒன்றும் எனது புகழுக்காக உழைக்கவில்லை. இந்தியாவின் பெருமைக்காக நான் பாடுபடுகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோன்று ஜனநாயகத்திற்கான அளவீட்டில் இந்தியா 10 இடங்கள் பின் தங்கியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தம், ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள 5 மாதகால கட்டுப்பாடுகள் ஆகியவைதான் இந்திய பின் தங்கியதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே மத்திய அரசு வெளிநாடுகளில் இந்தியாவின் நற்பெயரை கெடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளளன. 

இதற்கெல்லாம் பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, போடோ இயக்கத்துடனான ஒப்பந்தம், கர்தாபூர் குருத்வாரா ஒப்பந்தம், வங்கதேசத்துடனான சொத்து பாதுகாப்பு சட்டம், முத்தலாக்கை தடை செய்து முஸ்லிம் பெண்களுக்கு உரிமையை கொடுத்தது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, ஒவ்வொரு இந்தியர்களும் தங்களுக்கு மதிப்பு மிக்கவர்கள் என்றும், அந்த எண்ணத்துடன்தான் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர், மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு 2015-க்கு முன்பு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததால், இந்த சட்டம் அவர்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

More News