This Article is From Feb 03, 2020

'இந்தியாவின் பிரச்னைகளை தீர்த்து வரும் பாஜகவுக்கு வாக்களியுங்கள்' - டெல்லியில் மோடி பிரசாரம்

டெல்லியில் வசிக்கும் அனைத்து ஏழைகளுக்கும் 2022-க்குள் கான்கிரீட்வீடு கட்டித் தரப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். டெல்லியில் வரும் சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலையொட்டி டெல்லியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

New Delhi:

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 2022-ம் ஆண்டுக்குள் ஏழைமக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்து பிரசாரம் மேற்கொண்டார்.

கிழக்கு டெல்லியின் கர்கர்டூமா பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்த அவர், 'மத்திய அரசின் தலையீடு காரணமாக உங்கள் வீடுகளை புல்டோசர்கள் இடிக்காமல் உள்ளன. டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அங்கீகரிக்கப்படாத காலனி வீடுகள் மேம்படுத்தப்படும். டெல்லியை மாற்றுவதற்காக வாக்களியுங்கள். ஏனென்றால் இந்தியாவின் பிரச்னைகளை பாஜக தீர்த்து வருகிறது. பழைய விவகாரங்களுக்கும் தீர்வு காணப்படுகிறது' என்று பேசினார். 

டெல்லியில் 1,731 அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு உரிமையாளர் அதிகாரம் வழங்குவது தொடர்பாக கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட மசோதா குறித்து, வாக்காளர்களிடம் மோடி எடுத்துரைத்தார். 

இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மத்திய அரசின் நடவடிக்கையால் பயன் அடையப்போகும் 40 - 50 லட்சம்பேர் கடந்த 2015 தேர்தலின்போது ஆம் ஆத்மியை ஆதரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் மக்கள் புதிய வீடுகளை பெற்று வருவதாக குறிப்பிட்ட மோடி, அதேபோன்ற வசதியை டெல்லி மக்கள் பெறுவதற்கு ஆம் ஆத்மி தடையாக உள்ளதென்று குற்றம் சாட்டினார். 

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு கெஜ்ரிவால் தலைமையிலான அரசு தடையாக இருக்கிறது என்று கூறிய அவர், டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அந்த தடைகள் நீங்கிவிடும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய மோடி, 'வெறுப்பு அரசியலை எதிர்க்கட்சிகள் சில செய்கின்றன. இப்படிப்பட்ட அரசியல் இந்தியாவில் நடக்கக் கூடாது. இங்கு வளர்ச்சிக்கான அரசியல்தான் இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் நாங்கள் சிறப்பு அந்தஸ்தை நீக்கினோம், அயோத்தி வழக்கில் தீர்வு உள்ளிட்ட சாதனைகளை செய்துள்ளோம். 

பீகாருக்கும் - டெல்லிக்கும் இடையே பேருந்தை இயக்க ஆம் ஆத்மி தடையாக உள்ளதென்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். மக்களுக்கு ஏற்படப்போகும் வசதியை எதற்காக ஆம் ஆத்மி தடுக்கிறது? எதற்காக அக்கட்சி மக்களுக்கு எதிராக செயல்படுகிறது?' என்று கேள்வி எழுப்பினார். 

.