
லடாக் மோதலை தொடர்ந்து லே பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!
ஹைலைட்ஸ்
- லே பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி திடீர் ஆய்வு
- நிமுவில் முன்னோக்கி உள்ள இடத்தில்’ உள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல்
- 11,000அடி உயரத்தில் உள்ள இந்த பகுதி கடினமான நிலப்பரப்புகளில் ஒன்றாகும்
இந்தியா-சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லை பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லே பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தற்போது, ‘நிமுவில் முன்னோக்கி உள்ள இடத்தில்' உள்ளார். இன்று அதிகாலையில் அவர் அங்கு சென்றடைந்தார். அங்கு அவர் ராணுவ அதிகாரிகள், இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு காவலர்களுடன் உரையாற்றுகிறார். 11,000அடி உயரத்தில் உள்ள இந்த பகுதி கடினமான நிலப்பரப்புகளில் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, லடாக்கில் பிரதமர் ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக வெளிவந்துள்ள காட்சிகளில், பிரதமருடன் முப்படைத் தளபதி பிபின் ராவத்தும், ராணுவ தளபதி நரவனே உடன் உள்ளனர். இதில், இந்திய எல்லைப்பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு பற்றி பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, இன்று மாலையில் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம், மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், தாய்நாட்டின் கவுரவத்தை களங்கப்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் துணிச்சலான வீரர்கள் தெளிவுப்படுத்தியுள்ளளனர் என்றும் அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.