“உங்களிடமிருந்து கற்க வேண்டும்…”- Maharashtra அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மோடியின் பன்ச்!

மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கு வெகு நாள் கூட்டாளியாக இருந்த சிவசேனா, கூட்டணியை முறித்துக் கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்து ஆட்சியமைக்கப் பார்க்கிறது.

“உங்களிடமிருந்து கற்க வேண்டும்…”- Maharashtra அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மோடியின் பன்ச்!

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது.

New Delhi:

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உரையாற்றினார். அப்போது மகாராஷ்டிர அரசியலின் ‘கிங்-மேக்கராக' உள்ள சரத் பவாரின் (Sharad Pawar) கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு (NCP), மோடி, புகழாரம் சூட்டினார். 

“இன்று நான் இரண்டு கட்சிகளை பாராட்ட நினைக்கிறேன். தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம்… இந்த இரண்டு கட்சிகளும் நாடாளுமன்ற மாண்பு தெரிந்து நடந்து கொள்கின்றனர். அவர்கள் எப்போதும் நாடாளுமன்ற அவைகளில் போராட்டம் செய்ததில்லை. அப்படி இருந்தும், அவர்களின் கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும், என் கட்சி உட்பட அவர்களிடமிருந்து இந்த பண்பை கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று பேசினார் பிரதமர் மோடி.

மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கு வெகு நாள் கூட்டாளியாக இருந்த சிவசேனா, கூட்டணியை முறித்துக் கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்து ஆட்சியமைக்கப் பார்க்கிறது. இந்தக் கூட்டணியின் அச்சாரமாக விளங்குபவர் சரத் பவார். அவர் கட்சி பற்றி பிரதமர் மோடியே இன்று பாராட்டிப் பேசியுள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, முதல்வர் பதவியில் பங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாஜக-வுக்கு வைத்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாக சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். 

More News