ஆட்சி அமைத்த பாஜக - தேசியவாத காங். கூட்டணி; பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!!

பதவியேற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Maharashtra Government: தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Mumbai:

மகாராஷ்டிராவில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அரசியல் திருப்பங்களுடன் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. இந்நிலையில், சிவசேனா - காங்கிரஸ் -  தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இறுதியானதாகவும், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவே முதல்வர் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் நேற்று மாலை அறிவிப்புகள் வெளிவந்தது. 

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசியல் பரபரப்புகள் அனைத்தும் நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்த நிலையில், இன்று காலை முதல் எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் தொடர்ந்து, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

மகாராஷ்டிரா அரசியலில், இன்று காலை எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது.
 

இதற்காக மகாராஷ்டிராவில் இன்று காலை 5.47 மணி அளவில், மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து, காலை 8 மணி அளவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 

பதவியேற்றப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, மகாராஷ்டிராவிற்கு நிலையான ஆட்சி தேவை, சிவசேனா மக்களின் ஆணையி பின்பற்றவில்லை. 

ஆட்சி அமைக்க ஆளுநரிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது என்று கூறிய அவர், எங்களை ஆதரித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நன்றிறைய தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். 


இந்நிலையில், பதவியேற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என்று நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்வீட்டர் பதிவில், "மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் நலனில் இந்த அரசாங்கம் அக்கறை செலுத்தும் என்றும் அதில் புதிய தடங்களை அமைக்கும் என்றும் நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

முன்னதாக, மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது. 

இதில், பெரும்பான்மை கொண்ட கட்சியான பாஜகவை முதலில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். எனினும், அழைப்பை ஏற்க பாஜக மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, முதல்வர் பதவியையும் தேவேந்திர ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்தார். 

பாஜகவும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், அதிகாரப்பகிர்வு மோதல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனாவுடம் கொண்ட ஒப்பந்தத்தின் படி, 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட அம்சங்களை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தியது. 

எனினும், பாஜக இதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வந்தது. மேலும், அதிக இடங்களை கைப்பற்றிய தங்கள் கட்சி எதற்காக சரிபாதியாக அதிகாரத்தை பகிர வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி மறுப்பு தெரிவித்து வந்தது. இதைத்தொடர்ந்தே, சிவசேனா பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது.