லாக்டவுன் 4.0ல் குறிப்பிட்ட பகுதிகளில் விமானம், பேருந்து சேவைகளுக்கு அனுமதி!

ஹாட்ஸ்பாட் பகுதிகளை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே வழங்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாக்டவுன் 4.0ல் குறிப்பிட்ட பகுதிகளில் விமானம், பேருந்து சேவைகளுக்கு அனுமதி!

New Delhi:

மே.18ம் தேதி முதல் ஊரடங்கு 4.0 நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் என்டிடிவியிடம் கூறும்போது, கட்டுப்பாடு தளர்வுகள் அனுமதிக்கப்படும் பகுதிகளில் முதல்கட்டமாக சாலை போக்குவரத்துகள், விமான போக்குவரத்துகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

மாநிலங்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும், ஹாட்ஸ்பாட் பகுதிகளை வரையறுக்கும் அதிகாரம் அவர்களுக்கே வழங்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடனான மாநில முதல்வர்கள் சந்திப்பின்போது, இதனை பல மாநிலங்களும் வலியுறுத்தின. 

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, லாக்டவுன் 4.0 என்பது புதிய விதிமுறைகளுடன் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, ஹாட்ஸ்பாட் இல்லாத மண்டலங்களில் உள்ளூர் பேருந்துகள் குறைந்த அளவில் இயங்க தொடங்கும், ஆட்டோக்கள் மற்றும் கால்டாக்சிகளும் இயங்க அனுமதிக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார். மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களும் அனுமதிக்கப்படலாம், ஆனால் பாஸ் பெற்று பயணிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் உள்நாட்டுக்குள் விமான சேவைகளை துவங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார். 

ரயில் சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கு பதிலாக அனைத்து வகையான பொருட்களையும் வீடுகளுக்கு டெலிவிரி வழங்குவதற்கான அனுமதியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 9,268 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2,08,537 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து முக்கிய நகரங்களிலும் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்க அரசு விரும்புகிறது. ஆனால் கிட்டத்தட்ட 80 சதவீத பாதிப்புகள் மாநில நகர்ப்புற மையங்களான அகமதாபாத், சூரத் மற்றும் வதோதராவில் அதிகமாக உள்ளன. இதில், 70 சதவீத பாதிப்புகள் அகமதாபாத்தில் உள்ளன. இதனால், பாதிப்புகள் எதுவும் இல்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் வழங்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாத் துறையை புதுப்பிக்கவும் மெட்ரோ சேவைகள், உள்ளூர் ரயில்கள், உள்நாட்டு விமானங்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை மீண்டும் தொடங்கவும் கேரளா விரும்புகிறது, ”என்று ஒரு அதிகாரி கூறினார்.

கேரள மாநிலத்தில் 535 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அதிகபட்ச எண்ணிக்கையில் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து பலர் திரும்பி வந்தாலும் தனிமையில் உள்ள எண்ணிக்கை கூட அதிகமாக இல்லை. மாநிலத்தில் 494 பேர் மட்டுமே தனிமைப்படுத்தலில் உள்ளனர்.