
தற்போது 8.55 சதவீத வட்டி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஹைலைட்ஸ்
- மத்திய பணியாளர் நலத்துறை சேமநல நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
- உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து வழங்கப்படும்
- 6 கோடி பி.எஃப். சந்தாதாரர்கள் பலன் பெறுவார்கள்
நாடு முழுவதும் 6 கோடி பி.எஃப். (EPFO Provident Fund) சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தை மத்திய பணியாளர் நலத்துறை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது பி.எஃப். சந்தாதாரர்களுக்கு 8.55 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
2018-19-ம் ஆண்டில் இருந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு 8.65 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் சேமநல அமைப்பான EPFO (Employees Provident Fund Organisation) சேம நல நிதியை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் முக்கிய முடிவுகளை நிர்வாகக்குழுவான மத்திய ட்ரஸ்டீஸ் வாரியம் அவ்வப்போது எடுக்கும்.
இந்தக்குழுவின் கூட்டம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. அப்போது, வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் 6 கோடி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.