This Article is From Nov 13, 2018

குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 வினாத்தாளில் பெரியார் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்!

குரூப் 2 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. பொது அறிவு பிரிவில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு விடையாக அளிக்கப்ட்ட 4 பதில்களில் காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடபட்டுள்ள நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் தந்தை பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

மேலும், தந்தை பெரியாரின் பெயரை மட்டும் சாதி பெயரோடு சேர்த்து அச்சிட்டதோடு ஈ.வெ.என்பதற்கு பதிலாக இ.வெ.ராமசாமி நாயக்கர் என குறிப்பிட்டது கண்டனங்கள் எழுந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் குரூப்-2 வினாத்தாளில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் குரூப்-2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான் என்றும் இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
 

.