This Article is From Nov 14, 2018

மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் மடல்!

தமிழகத்தை கொள்ளையர்களிடம் இருந்தும் இந்தியாவை பாசிச ஆட்சியாளர்களிடம் இருந்தும் தலைவர் கலைஞர் வழியில் ஜனநாயகமுறையில் மீட்க நெஞ்சுயர்த்தி சூளுரைப்போம்!”

மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் மடல்!

மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவதும் விரட்டுவதும்தான் நமது ஒரே இலக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் தெரிவித்துள்ளார்.

கலைஞர் மறைந்த 100-வது நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள நினைவு மடலில்,

நெஞ்சம் மறந்தால்தானே நினைப்பதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். இதயத்தில், எண்ணத்தில், உதிரத்தில், உயிர்த்துடிப்பில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் தலைவர் கலைஞரை நொடிக்கு நூறுமுறையாவது நினைக்காமல் இருப்பதில்லை. ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயத்துடிப்பும் கலைஞரின் நினைவுகளுடனேயே இயங்கி நீடிக்கிறது.

அவர் உயிருடன் இல்லை என்கிறது இயற்கையின் விதி. எந்த விதியையும் மாற்றுகின்ற வல்லமைமிக்க தலைவராக விளங்கிய கலைஞர் அவர்கள் எங்களுக்குள்ளேதான், எங்களுடனேதான் இருக்கிறார் என்கிறார்கள் கழக உடன்பிறப்புகளும் தமிழக மக்களும். அதன் அடையாளம்தான், ஓய்வே எடுக்காமல் உழைத்த தலைவர், தன் அண்ணனிடம் இரவலாக வாங்கிய இதயத்தை, தான் கொடுத்த வாக்குறுதிப்படி திருப்பிக்கொடுக்கும் கடமையுடன் வங்கக் கடற்கரையில் பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் அவர் அருகிலேயே ஓய்வெடுக்கும் கலைஞருக்கு நாள்தோறும் அஞ்சலி செலுத்தத் திரண்டு வரும் பொதுமக்களின் அணிவரிசை. ஆகஸ்ட் 7 அன்று நம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு, தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். அவர் நம்மிடையே இல்லாமல் நூறு நாட்கள் கடந்த நிலையிலும் நம் நினைவெல்லாம் அவரே நிறைந்திருக்கிறார்.

கலைஞர் அவர்கள்தான், இந்தியாவின் மிகப் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய தேசிய அளவிலான கூட்டணிகளை உருவாக்கியவர். பல பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தேர்ந்தெடுத்தவர். குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற வடிவமைப்பை உருவாக்கிடச் செய்து, அதன் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்தின் நலன்களையும் பாதுகாத்தவர். அவர் வகுத்துத் தந்த வழிமுறை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

நாட்டின் எதிர்காலத்தைக் காக்கும் நல்ல சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன. அதற்குக் கட்டியம் கூறும் வகையில்தான், நவம்பர் 8ந் தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நகரில் தி.மு.கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அது வெறும் பொதுக்கூட்டம் அல்ல. போர்க்களத்திற்கான பாடிவீடு. அதனால்தான், ஜனநாயக அறப்போர் என்ற தலைப்புடன் கொள்ளைக்கார அ.தி.மு.க. ஆட்சியையும், பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் அதிகாரத்திலிருந்து அகற்றிடும் இலக்குடன் கழகத்தின் படைவரிசை அங்கே திரண்டது. தமிழ்நாடு முழுவதும் படையணி திரட்டப்படும். இந்திய அளவில் அது வலிமைப்படுத்தப்படும். மக்கள் விரோத ஆட்சி செய்யும் இந்த இரு பிரிவினரையும், அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிப்போரையும் இந்த ஜனநாயகப் படை எதிர்கொள்ளும்.

தமிழ்நாடு அரசு இன்று பெருங்கொள்ளைக் கூட்டத்தின் கையில் சிக்கி நாள்தோறும் சீரழிகிறது. இந்தியா மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களின் கொடூரப் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்த இரண்டையும் ஜனநாயக வழியில் அகற்றுவதும் விரட்டுவதும்தான் நமது ஒரே இலக்கு. தலைவர் கலைஞரின் புகழ் வணக்க நிகழ்வுகளில் நாம் அவரது நினைவுகளில் நீந்துவதுபோலவே, அவர் கற்றுத்தந்த எதிர்நீச்சலையும் மேற்கொள்வோம். அவரிடம் பயின்ற கனிவும் துணிவும் பணிவும் வலிவும் பொலிவும் குறிதவறாத வியூகமும் மிக்க உழைப்பை எந்நாளும் வழங்குவோம்! தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் ஒரேநோக்குடன் துணை நிற்கும் தோழமை சக்திகளை அரவணைத்துக் களம் காண்போம்!

மாநில உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு, அரசுக் கருவூலத்தைக் கொள்ளையடித்து, வருமானம் பார்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியையும் -பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை வஞ்சித்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து, அமைதியைக் கெடுக்கும் மதவெறியுடன் கோலோச்சும் பாசிச பா.ஜ.க ஆட்சியையும் வீழ்த்திட, தலைவர் கலைஞரின் நினைவு போற்றும் நூறாவது நாளில் நெஞ்சுயர்த்திச் சூளுரைப்போம்! அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றி, தமிழுலகம் மகிழ, வென்று காட்டுவோம் என ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

.