This Article is From Oct 29, 2019

குழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து முயற்சியும் செய்து வருகிறது - துணை முதலமைச்சர்

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகள் உடனடியாக மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

குழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து முயற்சியும் செய்து வருகிறது - துணை முதலமைச்சர்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

குழந்தையை உயிருடன் மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். 


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்துள்ளான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 32 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை துணை முதலைமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட வந்தார். துணை முதலமைச்சருடன் தேனி மக்களவைத் தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவிந்தீரநாத் குமார் வந்தார். துணை முதலமைச்சருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகள் குறித்த விளக்கத்தை அளித்தனர். அத்துடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒரு மணி நேரத்திற்குள் மீட்புப் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. முதலில் ஆழ்துளை கிணற்றுக்குள் சில இயந்திரங்களை வைத்து மீட்க முயற்சி செய்தோம். அதில் தோல்வி அடைந்ததை அடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் துளையிடுவது என்று திட்டமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதலில் ஒரு ரிக் இயந்திரம் துளையிட்டது. பாறைகள் அதிகம் இருந்ததால் ரிக் இயந்திரத்தில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து அதிநவீன இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகள் உடனடியாக மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

.