This Article is From Apr 06, 2020

“பால்கனி அரசா இருக்க விரும்புறீங்களா..?”- மோடியை கிழித்தெறிந்த கமலின் ‘ஓப்பன் லெட்டர்’

"வெறும் பால்கனிவாசிகளுக்கு பால்கனி அரசாக மட்டும் நீங்கள் இருக்க விரும்பமாட்டீர்கள்."

“பால்கனி அரசா இருக்க விரும்புறீங்களா..?”- மோடியை கிழித்தெறிந்த கமலின் ‘ஓப்பன் லெட்டர்’

"அடித்தட்டு மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டால் அது மேல்தட்டில் இருப்பவர்களை பாதிக்கும் என்பதைத்தான் வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது."

ஹைலைட்ஸ்

  • கமல், மோடியின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை விமர்சித்துள்ளார்
  • பணமதிப்பிழப்பு போலவே ஊரடங்கும் தவறாக அமல் செய்யப்பட்டுள்ளது: கமல்
  • ஏழை, எளிய மக்களின் நலன் பற்றி கமல், மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்

இந்தியாவில் கொரோனா தொற்றால் 4000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று லட்சக்கணக்கான மக்கள் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைத்து, அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் தங்கள் வீடுகளிலும், மேல் மாடங்களிலும் நேற்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் ஏற்றி வைத்தனர். கொரோனா பரவலைத் தடுக்க இந்திய அளவில் பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு அமல் செய்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. ஆனால், கொரோனா பரவல் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மிகவும் கறாராக விமர்சித்து ‘திறந்த கடிதத்தை' எழுதியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 

தனது கடிதத்தில் கமல், “ஒரு பொறுப்புள்ள அதே நேரத்தில் ஏமாற்றமடைந்த ஒரு குடிமகனாக இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன் பிரதமர் மோடி அவர்களே. கடந்த மார்ச் 24 ஆம் தேதி, நாடு முழுவதற்கும் உடனடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினீர்கள். பணமதிப்பிழப்பு ஸ்டைலில் இதைச் செய்தீர்கள். எனக்கு தற்போதைய அறிவிப்பு அதிர்ச்சி கொடுத்தாலும் உங்களை நம்பினேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அறிவித்த போதும் உங்களை நான் நம்பினேன். ஆனால், நான் நினைத்தது தவறு என்று காலம் எனக்கு சுட்டிக்காட்டியது. மீண்டும் எனக்கு காலம் அதையே சுட்டிக்காட்டியுள்ளது. 

எனது மிகப் பெரிய பயமே, பணமதிப்பிழப்பின்போது செய்த அதே மாதிரியான பிழை, இன்னும் பெரிய அளவில் செய்யப்படுகிறதோ என்பதுதான். மிகவும் வசதி படைத்த மக்களிடம் விளக்கு ஏற்றுங்கள் என்று நீங்கள் கோருகிறீர்கள். பால்கனியில் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வசதியானவர்கள் விளக்கு ஏற்றியபோது, ரொட்டி செய்யக் கூட எண்ணெய் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள். 

வெறும் பால்கனிவாசிகளுக்கு பால்கனி அரசாக மட்டும் நீங்கள் இருக்க விரும்பமாட்டீர்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டால் அது மேல்தட்டில் இருப்பவர்களை பாதிக்கும் என்பதைத்தான் வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பு அளிக்கும் தகவல்படி, சீன அரசு, டிசம்பர் 8 ஆம் தேதி, முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு  கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. முதல் சில நாட்களுக்கு எந்த நாடும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வைத்துக் கொண்டால் கூட, பிப்ரவரி முதல் வாரத்தில் உலக நாடுகள் விழித்துக் கொண்டன. இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு, ஜனவரி 30 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதை கண் முன்னே பார்த்துக் கொண்டிருந்தபோதும், அதைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒரு பிர்சனை பூதாகரமாவதற்கு முன்னரே அதற்கு விடை கண்டுபிடிப்பவர்தான் தொலைநோக்குடைய தலைவர். உங்களின் தொலைநோக்கு இந்த முறை பொய்த்துவிட்டது. 

உங்கள் அரசை யாராவது குறை கூறினாலும் அவர்கள் தேசவிரோதி என்று முத்திரைக் குத்தப்படுகிறார்கள். யாரெல்லாம் அக்கறை கொண்டுள்ளார்களோ அவர்களின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரமிது. நாங்கள் கோபத்தோடு உள்ளோம். ஆனாலும், உங்களோடுதான் உள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். 
 

.