This Article is From Sep 24, 2019

வெங்காய விலை எப்போது குறையும்?!! மத்திய அரசு முக்கியத் தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைந்ததால் விலை எகிறியுள்ளது.

வெங்காய விலை எப்போது குறையும்?!!  மத்திய அரசு முக்கியத் தகவல்!

வெங்காய விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 70 லிருந்து 80 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்திய மக்களின் அன்றாட உணவில் வெங்காயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தவகை பதார்த்தங்களை செய்தாலும் அதில் 90 சதவீதம் வெங்காயத்தின் பங்கு இல்லாமல் இருக்காது. வீடுகளில் மட்டுமல்லாமல் ஓட்டல்களும் வெங்காயத்தை நம்பித்தான் செயல்படுகின்றன. 

இந்த நிலையில் வெங்காயத்தின் விலை தற்போது ரூ. 80 வரை சென்றுள்ளது. இதற்கு மகாராஷ்டிரா உள்ளிட்ட வெங்காய விளைச்சல் அதிகம் உள்ள மாநிலங்களில் பெய்த கனமழையும், அதனால் வெளிமாநிலங்களுக்கு வெங்காய ஏற்றுமதி குறைக்கப்பட்டதுமே முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விலை உயர்வு காரணமாக, உணவு ஓட்டல்கள் திணறத் தொடங்கியுள்ளன. வெங்காயத்திற்கு பதிலாக உணவுப் பொருட்களில் முட்டை கோஸ்கள் கணிசமான அளவுக்கு சேர்க்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் விலை கட்டுக்குள் வரும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று தேசிய வேளாண்மை கூட்டுறவு மார்க்கெட்டிங் கூட்டமைப்பில் போதிய வெங்காயம் ஸ்டாக் இருப்பதாகவும், அவை விரைவில் சந்தைக்கு கொண்டுவரப்படும் என்றும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இதனால் விலை உயர்வு விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

.