This Article is From Jan 07, 2019

பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து! - இளைஞருக்கு ஐஏஎஸ் அதிகாரியால் நேர்ந்த கொடூரம்! (வீடியோ)

சர்ச்சைக்குறிய அந்த காணொலியில் அலிப்புர்தூர் மாவட்ட ஆட்சியர் நிக்கில் நிர்மல் அந்த இளைஞனை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளது தெரியவந்தது

Kolkata:

சமூக வளைதளத்தில் சர்ச்சைக்குரிய தகவலை பதிவிட்டதாக ஒரு இளைஞனை, மேற்கு வங்கத்தின் ஐஏஎஸ் அதிகாரியும் அவரது மனைவியும் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காணொலி தற்போது வைரலாகியுள்ளதால் ஐஏஎஸ் அதிகாரி விடுப்பு கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார்.  

சர்ச்சைக்குறிய அந்த காணொலியில் அலிப்புர்தூர் மாவட்ட ஆட்சியர் நிக்கில் நிர்மல் அந்த இளைஞனை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளது தெரியவந்தது. போலீசார் அளித்த தகவலின் படி, வினோத் குமார் சர்கார் என்ற இளைஞன், தன் சமூகவளைதளத்தில் மாவட்ட ஆட்சியர் நிக்கில் நிர்மலின் மனைவி நந்தினி கிஷான் குறித்த தவறான விமர்சனத்தை எழுதியுள்ளார். 

இது சம்பந்தமாக, வினோத் மீது ஃபலாகட்டா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஃபலாகட்டா காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரும் அவரது மனைவியும் சௌமியாஜித் ராய் என்னும் போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து அந்த இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளார். 

வலி தாங்க முடியாத அந்த இளைஞர் தான் செய்தது தவறு என்றும், தன்னை மன்னித்து விடுமாறும் கெஞ்சியுள்ளார்.  ஆனால், நிக்கில் நிர்மல், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டத்தில் தன்னை எதிர்த்து யாரும் பேசமாட்டார்கள் என்றும், அரைமணி நேரத்தில் உன்னை சிறையில் வைக்க முடிந்த என்னால், உன் வீட்டிற்கே வந்து கொலையும் செய்ய முடியும் என தொடர்ந்து அந்த இளைஞனை மிரட்டியுள்ளார்.  

அதேபோல, நந்தினி கிஷானும், இதுபோன்ற பதிவுகளை உன்னை எழுத தூண்டியது யார் என்றும் கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதற்கிடையில், வினோத் குமார் சர்காரின் தொலைபேசியை கைப்பற்றிய இருவரும், சமூக வளைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த பதிவை சத்தமாக படிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். அந்த இளைஞன் மௌனமாக இருந்ததால், அடித்தும் உதைத்தும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.  

இதுகுறித்து ஜனநாயக உரிமைகள் மற்றும் பாதுக்காப்பு சங்கத்தின் உறுப்பினர் ஜத்திஸ்வர் பாரதி கூறியதாவது, மாவட்ட ஆட்சியர் என்பவர் ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கக்கூடியவர். இப்படிப்பட்ட உயர் பதவியில் இருக்கும் இவர் காவல் நிலையத்திற்கு சென்று ஒரு இளைஞனை தாக்கி இருக்கக்கூடாது. அவரது மனைவி குறித்து தவறான விமர்சனத்தை ஒருவர் சமூக வளைதளத்தில் பதிவிட்டால், சைபர் கிரைம் போலீசாரிடம் முறையாக புகார் அளித்திருக்க வேண்டும். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரனை மேற்கொள்வார்கள். மாறாக, காவல் நிலையத்திற்கு அவர் மனைவியை அழைத்து சென்று ஒருவரை அடிப்பதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத செயல் ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்த போது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று மறுத்துவிட்டார்.

.