அதிர்ஷ்டமாக கிடைத்த பணம்!! உதறித் தள்ளியவரின் நேர்மைக்கு குவியும் பாராட்டு!!

அமெரிக்காவில் வசித்து வரும் ராகுல் பார்க்கே, ஜெக்தலேவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ.5 லட்சம், வெகுமதி அளிக்க முன்வந்துள்ளார். எனினும், ஜெக்தலே அதையும் ஏற்க மறுத்துவிட்டார். 

அதிர்ஷ்டமாக கிடைத்த பணம்!! உதறித் தள்ளியவரின் நேர்மைக்கு குவியும் பாராட்டு!!

ரூ.40,000 பணத்தை திரும்பி அளித்தவருக்கு வெகுமதிகள் குவிந்த நிலையிலும் எதையும் ஜெக்தலே ஏற்கவில்லை (Representational)

Pune:

பணம் மனிதனை எதையும் செய்ய வைக்கும், அது மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும், அப்படி இருக்கும் போது மகாராஷ்டிராவில் 54 வயது மனிதர் ஒருவர் தனக்கு அதிர்ஷ்டமாக கிடைத்த பணத்தை ஏற்காமல் உதறித் தள்ளிய சம்பவம் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

மகாராஷ்டிராவின் சாதரா பகுதியை சேர்ந்தவர் தனஞ்ச் ஜெக்தலே (54). வேலை நிமித்தமாக தீபாவளி தினத்தன்று தாகிவாடி பகுதிக்கு சென்ற அவர், மீண்டும் தனது ஊருக்கு செல்ல பாக்கெட்டில் 3 ரூபாயுடன் பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, சாலையோரம் கீழே கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கிடந்துள்ளது. 

அதனை பார்த்த ஜெக்தலே உடனடியாக அதனை எடுத்து அருகில் இருந்த அனைவரிடமும் விசாரித்துள்ளார். அப்போது, அருகில் ஒருவர் பதற்றத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்ததை பார்த்த ஜெக்தலே உடனடியாக அவரிடம் அந்த பணப்பையை ஒப்படைத்துள்ளார். 

பணத்தை தொலைத்தவர் அவரது மனைவியின் அறுவை சிகிச்சைக்காக அதனை எடுத்துச்சென்றுள்ளார். அதில், ரூ.40,000 இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஜெக்தலேவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ.1000த்தை வழங்கியுள்ளார். எனினும், ஜெக்தலே அந்த வெகுமதியை ஏற்க மறுத்துள்ளார். 

மேலும், அந்த இடத்தில் இருந்து ஜெக்தலேவின் ஊருக்கு பஸ் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் ஆகும். அவரிடம் வெறும் 3 ரூபாய் மட்டுமே இருந்தது. அதனால், தனக்கு வெறும் 7 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என அவரிடம் தெரிவித்துள்ளார். 

Newsbeep

இந்த செய்தியை அறிந்ததும் சாதரா பகுதி பாஜக எம்.எல்.ஏ. உள்பட பலரும் ஜெக்தலேவை பாராட்டி அவருக்கு சன்மானமாக பணம் கொடுத்துள்ளனர். எனினும் எந்த பணத்தையும் ஜெக்தலே வாங்க மறுத்துள்ளார்.

இதேபோல் ஜெக்தலே வசிக்கும் அதே மாவட்டத்தின் கோரேகான் தெஹசில் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பார்க்கே. தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ராகுல் பார்க்கே, ஜெக்தலேவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ.5 லட்சம், வெகுமதி அளிக்க முன்வந்துள்ளார். எனினும், ஜெக்தலே அதையும் ஏற்க மறுத்துவிட்டார். 

இதுதொடர்பாக ஜெக்தலே கூறும்போது, அடுத்தவர்கள் பணத்தை பெற்று நாம் ஒருபோதும் திருப்தியாக வாழ முடியாது. நான் மக்களுக்கு கூற விரும்புவது ஒன்று தான், அனைவரும் நேர்மையுடன் வாழ வேண்டும் என்பது மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து, வறுமை நிலையிலும், அதிர்ஷ்டமாக கிடைத்த வெகுமதியை ஏற்காமல் உதறித் தள்ளிய ஜெக்தலேவின் நேர்மைக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது.