This Article is From Feb 14, 2020

3.15 மணி நேரம்: பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் ஓபிஎஸ்!!

“2018 - 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் 8.17 சதவிகிதத்தில் வளர்ந்தது"

3.15 மணி நேரம்: பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் ஓபிஎஸ்!!

தமிழக அரசின் 2020 - 2021 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். 

இன்றைய பட்ஜெட் உரையை காலை மணி வாக்கில் ஆரம்பித்த பன்னீர்செல்வம், 196 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 

196 நிமிடங்களுக்கு நீண்ட பட்ஜெட் உரையைப் பற்றி தமிழக எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், “196 நிமிடம் நிதிநிலை அறிக்கையைப் படித்திருக்கிறார் ஓபிஎஸ். 159 நிமிடங்கள் மத்திய பட்ஜெட்டை வாசித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது எப்படி அதிமுக அரசு, மத்திய அரசைப் பின்பற்றுகிறது என்பதற்கான உதாரணம்,” என்று கேலி செய்தார். 

தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு!

பேரிடர் மேலாண்மை - ரூ. 1,360.11 கோடி

தமிழ் வளர்ச்சித் துறைக்கு - ரூ. 74.08 கோடி

நீதி நிர்வாகம் - ரூ. 1,403.17 கோடி

சிறைச்சாலைகள் துறைக்கு - ரூ. 393.74 கோடி

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கு - ரூ.403.68 கோடி

மீன்வளத் துறைக்கு - ரூ.1229.85 கோடி 

ஆகிய நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பட்ஜெட்டில் பேசிய பன்னீர்செல்வம், “2018 - 2019 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் 8.17 சதவிகிதத்தில் வளர்ந்தது. 2019 - 2020 ஆண்டில் 7.27 சதவிகிதமாக வளரும் என்று கணிக்கப்படுகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியான 5 சதவிகிதத்தைவிட அதிகமாகும். 2020 - 21 நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். 

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது தமிழக அரசின் வருவாய் 2,19,375 கோடி ரூபாய் எனவும் செலவும், 2,41,601 கோடி ரூபாய் எனவும், இதனால் பற்றாக்குறை 22,226 கோடி ரூபாய் எனவும் தெரிவித்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

.