This Article is From Jul 22, 2019

“கழிவறையை சுத்தம் செய்யவா எம்.பி ஆனேன்?”- பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு

பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல

சில மாதங்களுக்கு முன்னர், தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை, ‘தேசப் பக்தர்’ என்று புகழ்ந்தார் பிரக்யா தாக்கூர்

Bhopal:

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் பாஜக-வின் பிரக்யா தாக்கூர். சர்ச்சைப் பேச்சுக்குப் பெயர் போன தாக்கூர், தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 

சமீபத்தில் தனது போபால் தொகுதிக்கு உட்பட்ட செஹோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, “உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேனோ அதைச் சரிவர செய்வேன்.

ஒரு எம்.பி-யாக, உள்ளூர் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் மேம்பாட்டுக்காக பணி செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் குறைகளை உங்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிகளை வைத்துத் தீர்த்துக் கொள்ளவும். என்னை அடிக்கடி போன் மூலம் அழைத்துப் புகார் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்” என்று காட்டமாக கூறியுள்ளார். 

போபால் தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்று இருக்கும் நிலை குறித்து பிரக்யா தாக்கூரிடம் தெரிவித்த பின்னர், இதைப் போன்ற கருத்தைக் கூறியுள்ளார். 

பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்னர், தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை, ‘தேசப் பக்தர்' என்று புகழ்ந்தார். அவரின் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, “தாக்கூர் சொன்ன கருத்துக்காக என்னால் அவரை என்றும் மன்னிக்க முடியாது” என்றார். 

.