பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிவது எதிர்கட்சிகளின் விருப்பமாகாது: அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் காங்கிரஸ் முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர்

Lucknow:

பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பிரதமர் வேட்பாளராக ராகுலை ஒரு குறிப்பிட்ட கட்சி முன்மொழிவது எதிர்கட்சிகளின் விருப்பமாகாது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த மாநிலங்களில் கடந்த திங்கள் அன்று முதலமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் வருகை தந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர். இதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார். 

முன்னதாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா 2 நாட்கள் முன்னதாக நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.

அதன்பிறகு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று நான் முன்மொழிகிறேன். மேடையில் உள்ள மற்ற தலைவர்களும் இதனை முன்மொழிய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சியை தருக என்று கூறினார். 

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, பிரதமர் வேட்பாளராக ராகுலை ஒரு குறிப்பிட்ட கட்சி முன்மொழிவது எதிர்கட்சிகளின் விருப்பமாகாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்த முதலில் முயற்சித்தவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தான். இந்த முயற்சி தொடரும். ஆனால், பாஜக இதுகுறித்து மகிழ்ச்சியடைய வேண்டாம். ஏனென்றால் பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராக உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.