சுபஸ்ரீ மரணம் எதிரொலி: சீன அதிபருக்கு பிரம்மாண்ட வரவேற்பு - பேனர்கள் இல்லாத சாலைகள்!

சுபஸ்ரீ (23), கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

சுபஸ்ரீ மரணம் எதிரொலி: சீன அதிபருக்கு பிரம்மாண்ட வரவேற்பு - பேனர்கள் இல்லாத சாலைகள்!

சீன அதிபர் 2 நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ளார்.

Chennai:


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் முறைசாரா சந்திப்பு, சென்னை மகாபலிபுரத்தில் 2வது நாளாக நடந்து வருகிறது. இந்தியா, சீனா இடையிலான இரண்டாவது, முறைசாரா உச்சி மாநாடான இந்த சந்திப்பில், சீன அதிபருக்கு பிரமாண்ட வரவேற்புகள் வழங்கப்பட்டது.

எனினும், இந்த இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பிற்காக அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில், சாலைகள் முழுவதிலும் பேனர்கள் இல்லாமலே காட்சி அளித்தது தமிழக மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ (23), கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. 

தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இதனிடையே, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

மேலும், "உங்களுக்கு எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? அரசு அதிகாரிகள் ரத்த உறிஞ்சிகளைப் போல இருக்கிறார்கள்... பொறுப்பற்ற அதிகாரிகளால் உயிரிழப்பு ஏற்படுகின்றன... உயிர்களுக்கு இங்கு எந்த மரியாதையும் இல்லை. பேனர்கள் இருந்தால் மட்டுமே மக்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்களா? முதலமைச்சரும், அனைத்து கட்சித் தலைவர்களும் பதாகைகளை அமைப்பதை நிறுத்த அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

இதையடுத்து பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனாலும், சீன அதிபர் தமிழகம் வருவதையொட்டி அவரை வரவேற்க பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளே நீதிமன்றம் அனுமதி கேட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் பேனர் வைக்க அனுமதி அளித்தது.

இதனிடையே, உயிரிழந்த சுபஸ்ரீயின் தாயார் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார். அதில், பிரதமர் மோடி இது குறித்து கருத்து தெரிவித்தால் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது. பிரதமர் இதனை செய்தால், சுபஸ்ரீயின் ஆத்மா சாந்தியடையும் என்று அவர் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, உயர்நீதிமன்றம் பேனர் வைக்க அனுமதி அளித்தும், முக்கிய சந்திப்புகளில் மட்டுமே பிரதமர் மோடியையும், சீன அதிபர் ஜின்பிங்கையும் வரவேற்று பேனர் வைக்கப்பட்டிருந்தது. திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் பேனர்கள் ஏதும் வைக்கப்படவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து சுபஸ்ரீ தாயார் கீதா கூறும்போது, பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இனி இது போன்று யாரும் பாதிப்படையக் கூடாது. பேனரால் யாரும் வாழ்க்கையை இழக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, பேனர்கள் வைக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார். யார் மனைதையும் புண்படுத்த வேண்டாம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். பிரதமரும் அவருக்கு பேனர் வைக்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். 

இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் கூறும்போது, "நாங்கள் தெளிவாக இருக்கிறோம், அரசியல் பேனர்கள் வைப்பது சட்டமீறல் என்பதால் நாங்கள் அதை விரும்பவில்லை. பொது மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.