This Article is From Sep 16, 2019

Hindi Row: ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ..! - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை!!

இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி (Hindi) இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2017 ஜல்லிக்கட்டை விட பன்மடங்கு பெரிதான போராட்டம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை

Chennai:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சனிக்கிழமையன்று, 'இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்' என்று கூறி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். அமித்ஷாவின் இந்த கருத்திற்கு பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது என்று எச்சரித்துள்ளார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்வீட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். 

தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்,' என கூறியிருந்தார்.

அமித் ஷாவின் இந்த இந்தி குறித்த கருத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமித் ஷாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான்.

இந்தியா குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும் அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழிகள் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார். இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும் என்று அவர் எச்சரித்துள்ளார். 

இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்ற அமித்ஷாவின் கருத்து முற்றிலும் தவறானது. இந்தி மொழி பெரும்பான்மையான இந்தியர்களின் தாய்மொழி அல்ல. மத்திய அமைச்சரின் இந்த கருத்து, இந்தி பேசாத மற்ற மொழி பேசும் மக்களின் தாய்மொழிகளுக்கு எதிரான போர்க்குரல் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

அமித்ஷா தமது கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும்,‘வேற்றுமையில் ஒற்றுமை'என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை மத்தியில் பாஜக அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது. இது, இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்' முயற்சியாகவே தெரிகிறது. இது இந்தியா; ‘இந்தி'யா அல்ல” என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

.