This Article is From Mar 11, 2020

என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் இல்லை: சட்ட பேரவையிலிருந்து தி.மு.க வெளிநடப்பு

என்.பி.ஆர் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா?. பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட, என்.பி.ஆர்.-க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் இல்லை: சட்ட பேரவையிலிருந்து தி.மு.க வெளிநடப்பு

செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்

என்.பி.ஆர் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்தின் மீது திமுக தலைவர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அவர் உரையில் பேசுகையில்,' என்.பி.ஆர் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா?. பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட, என்.பி.ஆர்.-க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி பணி தொடங்கும் நிலையில், என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இதற்குப் பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ”மக்களை ஏமாற்றும் பொய்யான தீர்மானத்தினை நாங்கள் நிறைவேற்ற விரும்பவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் போட்டால் அது நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டத்தினைக் கட்டுப்பாட்டுத்தாது எனவே, என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என்று கூறியிருந்தார். எனவே, தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சட்டப் பேரவையிலிருந்து அடையாள வெளிநடப்பு செய்திருக்கின்றனர். இதில் தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த வெளிநடப்பின் போது பத்திரிக்கை நிருபர்களைச் சந்தித்த ஸ்டாலின், “வண்ணாரப் பேட்டையில் நாட்கணக்காக முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துங்கள். அவர்களுடைய கோரிக்கையாக இருக்கக்கூடிய என்.பி.ஆருக்கு எதிராகத் தீர்மானம் என்பதை நிறைவேற்றுங்கள் என்று தான் சட்டப்பேரவையில் குறிப்பிட்டதாகவும், அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் பி.ஆர் உதயகுமார், ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்த காரணங்களைக் குறிப்பிட்டு தீர்மானம் இயற்ற இயலாது என்று சொல்லிவிட்டார்.” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டார். என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தர்ணா போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி காவல்துறை தமிமுன் அன்சாரியை கைது செய்து வெளியேற்றியது.

                                                                                                                    -கார்த்தி.ரா

.