This Article is From Nov 16, 2019

Sabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தற்போதைக்குத் தடை விதிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

Sabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை!

உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். 

Thiruvananthapuram:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேரள அரசு, வெறுமனே ஒரு விஷயத்தை செய்து காட்ட வேண்டும் என்ற நினைப்போடு வரும் பெண் செயற்பாட்டாளர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. “இது ஆக்டிவிஸம் செய்வதற்கான இடம் இல்லை. திருப்பதி தேசாய் போன்ற நபர்கள் தங்களது உறுதியைக் காட்டுவதற்கு இது இடமில்லை. அப்படிப்பட்டவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று ஆணை வாங்கி வரட்டும்,” என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். 

அவர் மேலும், “முன்னர் இது பற்றி இருந்த நிலை என்பது வேறு. முன்னர் உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் நுழையலாம் என்று தெரிவித்த பின்னர், நிலைமை வேறாக உள்ளது. ஆனால், இப்போது நீதிமன்றம், பெரிய நீதிமன்ற அமர்வுக்கு வழக்கை மாற்றியுள்ளது. எனவே, இது வேறு வகையான நிலையாகும். தற்போது கொடுக்கப்படிருக்கும் நீதிமன்ற ஆணை குறித்தும் தெளிவு பெற உள்ளோம்,” என விளக்கியுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். 

தொடர்ந்து, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தற்போதைக்குத் தடை விதிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேரள முதல்வர், பினராயி விஜயன், “உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதை அரசு செயல்படுத்தும். தற்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி முன்னர் தெரிவித்துள்ள உத்தரவே செல்லும் எனத் தெரிகிறது. இருப்பினும் அதில் சில குழப்பங்கள் இருக்கின்றன. துறை சார்ந்த வல்லுநர்களிடம் அது குறித்து கேட்டு ஆலோசனை பெற்று நடப்போம்,” என்றுள்ளார்.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், என்.வாசு, “ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் சில குழப்பம் உள்ளன. அது குறித்து ஆலோசனை பெற உள்ளோம்,” என்று முடித்துக் கொண்டார். 


(With inputs from ANI)

.