‘திரிபுராவில் தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்’ - மத்திய அரசு

அசாமில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் தேசிய குடிமக்கள் பதிவு திட்டம் எனப்படும் என்.ஆர்.சி. திட்டத்தை திரிபுராவில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘திரிபுராவில் தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்’ - மத்திய அரசு

திரிபுரா என்.ஆர்.சி. விவகாரத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்கிறது மத்திய அரசு

வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் குறிப்பாக அசாமுக்குள் சட்டவிரோதமாக புகுந்து வருகின்றனர் என சமீப காலமாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அசாமை சேர்ந்த ஐ.என்.பி.டி. கட்சி நிர்வாகிகள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர். இதன் பின்னர், தேசிய குடிமக்கள் பதிவு திட்டமானது திரிபுராவிலும் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அவை அனைத்தும் வதந்திகள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சகம், தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை திரிபுராவில் நிறைவேற்றுவது தொடர்பாக எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக ராஜ்நாத் சிங்கை சந்தித்த ஐ.என்.பி.டி. கட்சி நிர்வாகிகள் அளித்த பேட்டியில், வங்க தேசத்தை சேர்ந்த பலர் சட்ட விரோதமாக திரிபுராவில் நுழைந்துள்ளனர். எனவே அவர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர்.

More News