This Article is From Dec 07, 2019

'பெண்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பில்லை!' - பாஜகவை சாடும் எதிர்க்கட்சிகள்!!

உன்னாவோ விவகாரத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், சட்டமன்றத்தின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

'பெண்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பில்லை!' - பாஜகவை சாடும் எதிர்க்கட்சிகள்!!

மாரடைப்பு காரணமாக டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டபெண் நேற்றிரவு உயிரிழந்தார்.

ஹைலைட்ஸ்

  • உன்னாவோ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நேற்றிரவு உயிரிழந்தார்
  • உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரியங்கா ஆறுதல்
  • குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஆதித்யநாத் உறுதி
Unnao:

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்து வரும் நிலையில், உன்னாவோ விவாகரத்தில் அவரது அரசை கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சிகள் பெண்களுக்கான இடம் உத்தரப்பிரதேசம் அல்ல என்று குற்றம் சாட்டியுள்ளன. 

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவை சேர்ந்த 23-வயதுப் பெண், கடந்த வியாழன் அன்று 5 பேர் கொண்ட கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் டெல்லியில் உள்ள சப்தார்ஜங் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. 

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சட்டமன்றத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்என்றும் அவர் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'பெண்கள் வாழ தகுதியற்றதாக உத்தரப்பிரதேசம் மாறியுள்ளது' என்று குற்றம் சாட்டினார். 

முன்னதாக ஆதித்யநாத் அரசையும், மாநில காவல் துறை தலைவரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அகிலேஷ் யாதவ், உன்னாவே பெண் உயிரிழந்த நாள் என்பது, தேசத்தின் கருப்பு நாள் என்று விமர்சித்தார். போராட்டத்தின்போது அவர் பேசுகையில், 'உத்தரப்பிரதேச முதல்வர், உள்துறை செயலர், மாநில காவல் துறை தலைவர் ஆகியோர் பதவி விலகாதது வரையில், நீதி கிடைக்காது. இது கருப்பு நாள். பாஜக ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் முதன்முறையாக நடப்பதில்லை. சட்டமன்றத்தில் இந்த பிரச்னை சம்பந்தமாக கூறிய முதல்வர், குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று கூறினார்' என்பதாக பேசினார்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து விட்டுசெய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, 'மாநிலத்தில் எந்தவொரு குற்றவாளிக்கும் இடமில்லை என்று முதலவர் கூறியுள்ளார். ஆனால் மாநிலத்தில் பெண்களுக்கு இடமில்லை என்பதுபோல்தான் மாநிலம் ஆகி வருகிறது' என்று விமர்சித்தார்.

5 பேர் தீயிட்டு கொளுத்திய பின்னர் 90 சதவீத காயங்களை உன்னாவோ பெண் அடைந்தார். முன்னதாக அவர் தன்னை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார். இது சம்பந்தமாக அவர் நீதிமன்றத்திற்கு வரும்போது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை தீயிட்டுக் கொளுத்தியது. 

அவரை,டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக நேற்று அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முக்கிய நபருக்கு கடந்த வாரம் ஜாமீன் வழங்கப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மார்ச் மாதம்தான் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் அளித்து 4 மாதங்கள் கழித்து இந்த நடவடிக்கையை போலீஸ் எடுத்திருக்கிறது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே தொடர்பிருப்பதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். குற்றத்தை செய்தவர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே தொடர்பிருப்பதாக எனக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் அவர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குற்றவாளிகளுக்கு இந்த மாநிலத்தில் அச்சம் கிடையாது.' என்று கூறியுள்ளார். 

முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதியும் பாஜகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். 'பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்து புகார் செய்யப்படாத நாட்களே உத்தரப்பிரதேசத்தில் இல்லை' என்று அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையே குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள முதல்வர் வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 

.