This Article is From Oct 30, 2019

குழந்தை சுஜித் விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

சிறுவனைக் காப்பற்ற முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டது வருத்தமான விஷயமாகும், மீட்புப் பணிகள் வெற்றியடையவில்லை என்பதால் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

குழந்தை சுஜித் விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

சுஜித் விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது - ஜி.கே.வாசன்

குழந்தை சுஜித் விவகாரத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. சுஜித்தை மீட்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும், அதிர்வுகளால் சுஜித் 88 அடிக்கு சென்றுவிட்டான். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை நேற்று அதிகாலை மீட்டு வெளியே எடுத்தனர்.

தொடர்ந்து, சுஜித்தின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன்பின், குழந்தை சுஜித்தின் உடல் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை? ஒரு சுஜித்தை காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியினர் பேரிடர் நேரங்களில் எப்படி தமிழக மக்களை காப்பாற்றப் போகிறார்கள்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாகத்தான் சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை என்று தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ராணுவத்தை அழைத்திருக்கலாம் என்கிறார். 2009ஆம் ஆண்டு, தேனி மாவட்டத்தில் 6 வயது சிறுவன், ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது, திமுக அரசு, இறந்த நிலையில்தான் மீட்டார்கள். இவர்களுடைய ஆட்சி காலத்தில் ஏன் ராணுவத்தை அழைத்து சிறுவனை மீட்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசு, அமைச்சர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் அயராது அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர். சிறுவனைக் காப்பற்ற முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டது வருத்தமான விஷயமாகும், மீட்புப் பணிகள் வெற்றியடையவில்லை என்பதால் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.

இந்த விஷயத்தை யாரும் அரசியலாக்கவோ, குறை கூறவோ கூடாது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீன இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு தமிழக அரசு பரிசு அறிவித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். 
 

.