This Article is From Dec 24, 2019

''NRC-யை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை'' - அமித் ஷா விளக்கம்!!

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தநிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்களுக்கு முன்பாக பேசினார்.

''NRC-யை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை'' - அமித் ஷா விளக்கம்!!

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவில்லை என்கிறார் அமித் ஷா.

New Delhi:

NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் தொடர்பில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். 

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தநிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்களுக்கு முன்பாக பேசினார்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அமித் ஷா அளித்துள்ள பேட்டியில், 'தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடத்த தேவையில்லை. அதுபற்றி மத்திய அரசும் விவாதிக்கவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடி அளித்த விளக்கம் முற்றிலும் சரியே. 

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார். 

கடந்த ஞாயிறன்று டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நாடு முழுவதும் என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஏற்படுத்தப்படவில்லை. 130 கோடி இந்திய மக்களிடம் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் 2014-ல் ஆட்சிக்கு வந்த பின்னர் என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் இருந்தது. அதன் அடிப்படையில் அசாமில் என்.ஆர்.சி. செயல்படுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் பொய் பரப்பப்படுகிறது. டிவியில் இன்டர்வியூ கொடுக்கும் தலைவர்கள் என்.ஆர்.சி.யை நாடு முழுவதும் செயல்படுத்த அதிக செலவு ஆகும் என்று கூறியிருந்தனர். நடக்காத ஒன்றைப் பற்றி அவர்கள் சக்தியை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். 

இதை சுட்டிக் காட்டி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அப்டேட் செய்வதற்காக ரூ. 3,491 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு NPR என்பது மத்திய அரசின் திட்டங்களின் அடிப்படையில் அமையும். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது நாட்டின் குடிமக்கள் என்பதன் அடிப்படையில் அமையும்.

இந்த இரு பதிவேட்டிற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஒன்றுக்கொன்று அவை தொடர்பு கிடையாது. என்.பி.ஆர்.-ன்போது பெறப்படும் தகவல்களை என்.ஆர்.சி.க்கு பயன்படுத்த முடியாது. 

என்.பி.ஆர். என்பது பல்வேறு மத்திய அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இந்த என்.பி.ஆர்.யை எதிர்ப்பவர்கள், ஏழை மக்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்துகின்றனர்.' என்று தெரிவித்தார்.

என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றுக்கிடையே தொடர்பு உள்ளது என்பதன் அடிப்படையில் கேரளா மற்றும் வங்கம் ஆகியவை தங்களது பகுதியில் மக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்தியுள்ளன. 
 

.