‘இந்தியர்கள் யாரும் விடுபடமாட்டார்கள்!’- அசாம் விவகாரத்தில் ராஜ்நாத் சிங்

அசாம் மாநில இறுதி குடியுரிமை வரைவு குறித்தான விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி வருகிறது

New Delhi:

அசாம் மாநில இறுதி குடியுரிமை வரைவு குறித்தான விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி வரும் நிலையில், அது குறித்து ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அசாம் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் இறுதி குடியுரிமை வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது. அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகறிது. 
 

tepb8j78

பூதாகரம் எடுத்து வரும் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் பேசுகையில், ‘குடியுரிமை வரைவு குறித்து அனைத்தும் சட்டப்படியும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிமுறைகளின் படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நான் அனைவருக்கும் ஒன்றை உறுதிபட சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்திய குடிமக்கள் யாவரும் குடியுரிமை பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். எனவே அது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதேபோல, இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் விடுபட்டவர்களுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. இறுதிப் பட்டியல் எங்கள் கையில் கிடைத்த பின்னர், விடுபட்டவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு அதற்கான முழு உரிமை கொடுக்கப்படும். எந்த உரிமையும் தட்டிப் பறிக்கப்படாது. எனவே, இந்த விவகாரத்தில் அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அசாமில் சட்ட ஒழுங்கை காக்க மத்திய அரசு, அம்மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளது’ என்று விளக்கம் அளித்தார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் நேற்று அசாம் மாநில, சில்சார் விமானநிலையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்று மக்கள் மத்தியில் ‘இறுதி குடியுரிமை வரைவு’-க்கு எதிராக பிரசாரம் செய்யலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால், அவர்கள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டனர். 

இதனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியனர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் செய்தனர். 

இந்த விவகாரம் குறித்து காட்டமான விமர்சனத்தை வைத்து வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ‘இது பாஜக-வின் பிரித்து ஆளும் யுக்தி. யாரெல்லாம் பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டார்களோ அவர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேற்றவே இந்த ஏற்பாடு’ என்று கருத்து கூறியுள்ளார்.
 

More News