உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் இறக்குமதி கணிசமாக குறைக்கப்படும் என்கிறார் நிதியமைச்சர்.
New Delhi: கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதனை சரி செய்யும் விதமாக ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 3 நாட்களாக விளக்கம் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். இன்று 4-வது நாளாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
ஆயுத உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 49 சதவீதமாக இருந்த அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவனங்களாக மாற்றி அமைக்கப்படும். இது தனியார் மயமாக்கும் நடவடிக்கை அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ராணுவ தளவாட உற்பத்தி துறையில் தன்னிறைவு எட்டப்படும். இதற்காக மேக் இன் இந்தியா திட்டம் பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட ராணுவ தளவாடங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டு, அவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சீர்திருத்தங்கள் மூலமாக விமானங்களை இயக்குவதற்கான செலவில் ரூ. 1,000 கோடி வரை மிச்சப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வான் பரப்பில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வான் எல்லையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த 3 நாட்களில் விவசாயிகள், சிறு குறு தொழில்கள், மீனவர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் நலன் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குறிப்பாக விவசாயிகளின் நலனுக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.