This Article is From Jan 30, 2020

நிர்பயா வழக்கு : குற்றவாளி வினய் சர்மா குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்!!

பிப்ரவரி 1-ம்தேதி காலை 6மணிக்கு நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வினய் சர்மா கருணை மனு தாக்கல் செய்திருப்பதால் தண்டனை சரியான நேரத்தில் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நிர்பயா வழக்கு : குற்றவாளி வினய் சர்மா குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்!!

வினய் சர்மா பிப்ரவரி 1-ம்தேதி தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், குற்றவாளி வினய் சர்மா குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியுள்ளார். இதனால் குற்றவாளிகள் பிப்ரவரி 1-ம்தேதி தூக்கிலிடப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதுகுறித்து பேட்டி அளித்துள்ள வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் கூறுகையில், 'குடியரசு தலைவருக்கு வினய் சர்மா கருணை மனுவை அனுப்பியுள்ளார்' என்று தெரிவித்துள்ளார். 

சனிக்கிழமையன்று வினய் சர்மா, முகேஷ் சிங், அக்சய் சிங், பவன் குப்தா ஆகியோருடன் சேர்ந்து தூக்கிலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மற்றொரு குற்றவாளி அக்சய் சிங் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இது நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ளது. 

இத்தகைய காரணங்களால் குற்றவாளிகள் திட்டமிட்டபடி வரும் சனிக்கிழமையன்று தூக்கிலிடப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முறைப்படி குற்றவாளிகள் 4 பேரும் ஜனவரி 22-ம்தேதி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளி அக்சய் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவது பிப்ரவரி 1-ம்தேதிக்கு மாற்றப்பட்டது. 

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 

இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

முன்னதாக, திகார் சிறை அதிகாரிகள் குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்ட கருணை மனுவுக்கு போதிய ஆவணங்கள் ஏதும் அளிக்கவில்லை என்று கூறி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எதிர்த்தரப்பில் குற்றவாளிகள் யுக்திகளை கையாண்டு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. 

மரண தண்டனை குற்றவாளிகள் இவ்வாறு தங்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போட, பல்வேறு யுக்திகளை கையாளுகிறார்கள் என்று கருதிய மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியது. மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது குற்றவாளி வினய் குமார் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதால் சனிக்கிழமை நிறைவேற்றப்படவிருக்கும் மரண தண்டனை கால தாமதமாகும் என கருதப்படுகிறது. 

.