This Article is From Aug 25, 2018

பாரம்பரிய விதைகளை கேரளாவுக்கு வழங்கும் 'அன்னதானா'; விவசாயத்தை மீட்டெடுக்க ஓர் உன்னதப் பணி!

இயற்கை சீற்றங்கள் நிகழ்வது இயற்கையான ஒன்றாகக் கருதப் பட்டாலும், அது விட்டுச் செல்லும் தடம் வலி மிகுந்தது

பாரம்பரிய விதைகளை கேரளாவுக்கு வழங்கும் 'அன்னதானா'; விவசாயத்தை மீட்டெடுக்க ஓர் உன்னதப் பணி!

இயற்கை சீற்றங்கள் நிகழ்வது இயற்கையான ஒன்றாகக் கருதப் பட்டாலும், அது விட்டுச் செல்லும் தடம் வலி மிகுந்தது. இதற்காக யாரையும் குறைப்பட்டுக் கொள்ள முடியாது. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் எல்லாம் இயற்கையிடம் எடுபடாது.

அப்படித்தான் கேரள வெள்ளமும் இந்தியா தாண்டி அரேபிய நாடுகள் வரை சோகத்தை வர வைத்து விட்டது. அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் பணம், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் என தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு உதவிக்கரம் நீட்டி, கேரளாவை பெரும் துயரில் இருந்து மீட்டனர்.

n02kl7lg

இது ஒருபுறமிருக்க, 'அன்னதானா' என்ற என்.ஜி.ஓ - வின் உதவி வித்தியாசமான முறையில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி என்ன செய்து விட்டார்கள் என்கிறீர்களா? மண் மற்றும் விதைகளை பாதுகாக்க இந்த என்.ஜி.ஓ 17 வருடமாக இயங்கி வருகிறது. நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களும், காய்கறிகளும் அழிந்து வரும் நிலையில், அந்த விதைகளை மீட்டு, ஆரோக்கியமான சமூகத்தை நிறுவுவதற்காக இவர்கள் எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பை கட்டாயம் பாராட்ட வேண்டும்.

பல ஏக்கர் விவசாய நிலங்களும் காய்கறிகளும் கேரள வெள்ளத்திற்கு இரையாகி விட்டன. உடைமைகளை மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம், ஆனால் விதைகள்? இதற்குத்தான் அன்னதானா ஒரு சிறப்பான முறையைக் கையாள்கிறது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள அன்னதானாவின் தலைவர் திருமதி சங்கீதாவை தொடர்புக் கொண்டோம்.

ebqus4ag

"நாங்கள் 17 வருடமாக பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வருகிறோம். கேரள வெள்ளத்தைப் பொறுத்தவரை, முதலில் தோன்றியது விவசாயமும் பாரம்பரிய உணவுப் பொருட்களும் தான். முக்கியமாக அந்தந்த நிலத்திற்கு என்று ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். உதாரணமாக வாழை, பலா, மரவள்ளி போன்றவவை கேரள மண்ணின் பாரம்பரிய உணவுகள். ஆனால் வெள்ளத்தில் இதெல்லாம் நிச்சயம் மிஞ்சியிருக்காது. இதை விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் நிலையைப் பற்றி யோசிக்கும் போது தான், கேரளாவின் பாரம்பரிய விதைகளை உடனடியாக சேகரிக்கத் தொடங்கினோம். பிறகு அதை கேரள விவசாயிகளுக்கு வழங்கி, விவசாயத்தை பாதுகாப்பது என முடிவெடுத்தோம். முக்கியமாக பல்லுயிர் பெருக்கத்தையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதனால் இந்த முயற்சி, கேரளாவுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.

jibk1148

கேரளாவின் தட்ப வெட்ப நிலையில் விளையும் மிளகாய், கத்திரிக்காய், இஞ்சி, முள்ளங்கி, மஞ்சள் போன்ற காய்கறிகளின் விதைகளை ஒருபுறம் சேகரித்து, மறுபுறம் அதை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

நாங்கள் சில விவசாய சங்கங்களின் தலைவர்களுடனும், விவசாயிகளுடன் தொடர்பில் இருக்கும் என்.ஜி.ஓ-க்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் மூலமாக நாங்கள் பாரம்பரிய விதைகளை விநியோகம் செய்து வருகிறோம். இதனால் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு விவசாயத்தில், கேரளா மீண்டும் பழைய நிலையை அடையும்" என்றார்.


 

.