This Article is From Jul 11, 2018

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்: 10 ஃபேக்ட்ஸ்!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் கொடுக்கச் சொல்லி தீர்ப்பு வழங்கியது

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்: 10 ஃபேக்ட்ஸ்!
Madurai:

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் கொடுக்கச் சொல்லி தீர்ப்பு வழங்கியது. இந்த முறை நடந்த நீட் தேர்வின், தமிழில் கொடுத்த வினா தாளில் 49 வினாக்களில் பிழை இருந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஒரு வினாவுக்கு 4 மார்க் வீதம் 196 மதிப்பெண்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ அமைப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.

நீட் 2018 தேர்வு, நாடு முழுவதும் 2255 மையங்களில் நடத்தப்பட்டது. மே மாதம் 6 ஆம் தேதி 136 நகரங்களில் நடந்தது இந்தத் தேர்வு. அதன் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

தெரிந்துகொள்ள வேண்டிய ஃபேக்ட்ஸ்

சிபிஎம் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் வினா தாள் பிழை தொடர்பான ஒரு பொது நல வழக்கை தொடர்ந்தார். அவர் மனுவில், ‘நீட் தமிழ் வினா தாளில் 49 கேள்விகள் மற்றும் பதில்கள் தவறாக இருந்ததை கண்டுபிடித்திருக்கிறோம். எனவே, 49 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்கள் கொடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, சிபிஎஸ்இ அமைப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை இரண்டு வாரங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த கவுன்சிலிங்கையும் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு மூலம் மதிப்பெண் பட்டியலில் பெரும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

‘இன்னும் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் எங்களுக்கு வரவில்லை. எனவே இப்போதைக்கு எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது’ என்று சிபிஎஸ்இ தரப்பு கருத்து கூறியுள்ளது.

‘அறிவியலில் பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் மொழி பெயர்ப்புக்கு சிபிஎஸ்இ அமைப்பு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

‘சிபிஎஸ்இ அமைப்பு எதேச்சதிகாரத்தன்மையோடு இந்த விஷயத்தில் நடந்து கொண்டிருப்பது தெரிகிறது’ என்று கண்டனம் தெரிவித்தது நீதிமன்றம்.

‘தனியாக +2 படிக்கும் மாணவர்கள் ஏன் நீட் தேர்வில் பங்கெடுக்கத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்’ என்றும் கோர்ட் வினவியுள்ளது.

நீட் 2018 தேர்வு, 11 மொழிகளில் நடைபெற்றது.

தமிழில் நீட் தேர்வை 24,720 மாணவர்கள் எழுதினர். 

13,26,725 பேர் நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1,20,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 1.07 லட்சம் மாணவர்கள் 10 நகரங்களில் 170 மையங்கள் மூலம் இந்தத் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

.