"கேரளாவுக்கு உணவு, உடை வேண்டாம்; இவர்கள் தான் வேண்டும்” - மத்திய அமைச்சர்

மத்திய படைகளுடன், மக்களும் இணைந்து, பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் உதவி வருகின்றனர், என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

Thiruvananthapuram:

கேரளாவில் பெய்த அசுர மழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர், லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இருந்து உதவிகள், கேரளாவுக்கு கொட்டி வருகின்றது. இந்த சமயத்தில் உணவு மற்றும் உடைகள் தேவையில்லை என்றும், தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தான் கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல உதவு முடியும் என்று மத்திய அமைச்சர் கே.ஜே அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் கேரளாவின் நிலையை பார்வையிட்டார். நிலையை சரி செய்ய என்ன தேவையோ அதை செய்வதாக உறுதியளித்துள்ளார். உடனடி நிதியாக 500 கோடி ரூபாய் அளித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 100 கோடி ரூபாயும், கிரண் ரிஜ்ஜு 80 கோடி ரூபாயும் அறிவித்துள்ளார். ஆகையால் இப்போது நிதிக்கு பிரச்சனை இல்லை.” என்றார் கே.ஜே. அல்போன்ஸ்.

கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் முகாம்களில் உள்ளனர். “மத்திய அரசு அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் உடையை வழங்கி வருகிறது” என்றும் கூறினார்.

இதுவரை 3,700 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரிய நோய் தொற்று பாதிப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

“மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, பிளம்பிங் மற்றும் மர வேலைகள் உள்ளன. இப்போது உணவு மற்றும் உடைகள் தேவையில்லை. தொழில்நுட்ப வேலைகள் தெரிந்தவர்கள் தான் தேவை. அவர்களால் தான் கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல முடியும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உணவு பொருட்களுக்கு எந்த பிரச்சனையும். திருவிழா காலத்தை முன்னிட்டு வியாபாரிகள் உணவு பொருட்களை அதிகளவில் வைத்திருந்தனர். இப்போது உணவு பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதில் தான் சிக்கல் இருக்கிறது. மத்திய படைகளுடன், மக்களும் இணைந்து, பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் உதவி வருகின்றனர், என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.