Islamabad: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃபுக்கு, ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். அவரின் மகள் மர்யம் ஷரிஃபுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நவாஸ் ஷரிஃப் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டு 4 வழக்குகள் உள்ளன. அதில் ஒன்றான லண்டன் அவென்ஃபீல்டு என்ற இடத்தில் 4 சொகுசு அப்பார்ட்மென்ட்கள் வாங்கிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை ஒருவாரம் தள்ளி அறிவிக்குமாறு நவாஸ் ஷரிஃப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. தற்போது லண்டனில் அவரது மகள் மர்யமுடன் இருக்கும் ஷரிஃப், வழக்கின் தீர்ப்பை நீதிமன்றத்தில் நின்றபடி கேட்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்து அந்த கோரிக்கையை வைத்திருந்தார்.
மேலும், லண்டனில் சிகிச்சை பெற்று வரும் ஷரிஃபின் மனைவி குல்சூமின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, தீர்ப்பை தள்ளி வைக்குமாறு மற்றொரு மனுவும் ஷரிஃப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்ட குல்சூம், மேல் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அதனால் கடந்த ஓராண்டாக, லண்டனுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்று வந்து கொண்டிருந்தனர் ஷரிஃபும் மர்யமும்.
உலக அளவில் பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய பனாமா பேப்பர் ஊழல் தகவல்கள் வெளியான பிறகு தான், ஷரிஃபுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட இந்த அவென்ஃபீல்டு வழக்கில் ஷரிஃபை விசாரிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஷரிஃப் மற்றும் மர்யமை தவிர்த்து, ஷரிஃபின் மருமகன் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் சஃப்தாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஷரிஃபின் இரண்டு மகன்களான ஹசன் மற்றும் ஹுசேன் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.