This Article is From Dec 15, 2018

தேசிய தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு: மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தேசிய தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு: மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலை குறித்து ஆய்வு செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு நடத்துமாறு தீர்ப்பயாம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆலையை ஆய்வு செய்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, ஆலையை திறக்கலாம். ஆலையை மூடியது சரியல்ல எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் சமீபத்தில் அறிக்கை அளித்திருந்தது.

இதனையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, விசாரணை முடிவடைந்ததை அடுத்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான ஆதாரங்களை அரசு சேரிக்க வேண்டும்.

இனியாவது, தமிழக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தேசிய தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு என்று அவர் கூறியுள்ளார்.

.