This Article is From Jan 14, 2020

’முரசொலி என்றால் திமுககாரர், துக்ளக் என்றால் அறிவாளி’: ரஜினி பேச்சு

கவலைகள் அன்றாடம் வரும்; அதை நிரந்திரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான்.

’முரசொலி என்றால் திமுககாரர், துக்ளக் என்றால் அறிவாளி’: ரஜினி பேச்சு

தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை - ரஜினி

முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். 

தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, சோ ஒரு ஜீனியஸ், ஜீனியஸ் என்பதை அடையாளப்படுத்த சில ஆண்டுகளாகும். தான் ஜீனியஸ் என்பதை நிரூபிக்க சோ எடுத்த துறை பத்திரிகை துறையாகும். அவரது ஆயுதம் துக்ளக். முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம், 

சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை. சோவை பெரிய ஆளாக்கியது பக்தவத்சலம், கலைஞர் ஆகிய இருவர் தான். எமர்ஜென்சியை எதிர்த்ததால் தேசிய அளவில் அறியப்பட்டார் சோ. சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. 

கவலைகள் அன்றாடம் வரும்; அதை நிரந்திரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான். கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி, தற்காலிகமாக்கிக் கொண்டால் அறிவாளி.

பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது. பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 
 

.