கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை சித்தி விநாயகர் கோயில் மூடப்பட்டது!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை சித்தி விநாயகர் கோயில் மூடப்பட்டது!!

ஹைலைட்ஸ்

  • மறு உத்தரவு வரும் வரையில் கோயில் மூடப்பட்டிருக்கும்
  • மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது
  • தமிழகத்திலும் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பிரபல மும்பை சித்தி விநாயகர் கோயில் இன்று மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரையில் கோயில் மூடப்பட்டிருக்கும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஷீரடி மற்றும் சபரிமலை கோயில்களின் நிர்வாகம் பக்தர்கள் தரிசிக்க வருவதை சில வாரங்களுக்கு ஒத்திப் போடுமாறு கேட்டுக்கொண்டிருந்தது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது. 50- பேருக்கும் அதிகமானோர் கூடுவதற்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை ஆட்டம் காணச் செய்து வருகிறது. இத்தாலியில் ஒரே நாளில் மட்டும் 368 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் 140-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. எப்போது நிலைமை இயல்புக்குத் திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மார்ச் 31-ம்தேதி வரை மூடுவதற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com