மும்பையில் தொடர் கனமழை: அலுவலகங்களுக்கு விடுமுறை, உள்ளூர் ரயில் சேவைகள் ரத்து!

Mumbai Rain: மும்பை நகரில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 230.06 மிமீ மழை பதிவாகியுள்ளது

மும்பையில் தொடர் கனமழை: அலுவலகங்களுக்கு விடுமுறை, உள்ளூர் ரயில்கள் ரத்து!

Mumbai:

மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு மற்றும் இன்று காலை பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மும்பையின் 20 மில்லியன் குடியிருப்பாளர்களின் உயிர்நாடியான உள்ளூர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவசரகால சேவைகள் தவிர நகரத்தின் அனைத்து அலுவலகங்களும் இன்று மூடப்பட்டுள்ளன. மும்பை உள்ளிட்ட ஒரு சில அண்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் "மிக அதிக மழைப்பொழிவுக்கு" வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை தவிர, மகாராஷ்டிராவின் தானே, புனே, ராய்காட் மற்றும் ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர, நகரத்தில் உள்ள மற்ற அனைத்து அலுவலகங்களும் இன்று மூடப்படும் என்று மும்பையின் குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ட்வீட்டர் பதிவில், "நேற்றிரவு முதல் பெய்த கனமழை காரணமாகவும், மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்ற கணிப்பு காரணமாக," அவசர சேவைகள் தவிர, மும்பையில் உள்ள அனைத்து அலுவலகங்களும் நிறுவனங்களும் மூடப்படும் "என்று குறிப்பிட்டுள்ளது. 

ப்ரிஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து பேருந்து சேவைகள் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குறைந்தது எட்டு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளதாக குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

கோரேகான், கிங் சர்கிள், ஹிந்த்மாதா, தாதர், சிவாஜி சவுக், ஷெல் காலனி, குர்லா எஸ்.டி டிப்பாட், பாந்த்ரா டாக்கீஸ், சியோன் சாலை போன்ற பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மலாட் பகுதியில் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் 12:47 மணிக்கு அதிக அலை எதிர்பார்க்கப்படுவதால், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும், எந்தவொரு கடற்கரை அல்லது தாழ்வான பகுதிகளுக்கும் அருகில் செல்ல வேண்டாம் என்று குடிமக்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக சுமார் 4.51 மீட்டருக்கு அலைகள் எழும் என கணிக்கப்பட்டுள்ளன.

மும்பை நகரில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 230.06 மிமீ மழை பதிவாகியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் முறையே 162.83 மற்றும் 162.28 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்று, நாளை மற்றும் வியாழக்கிழமை வரை வடக்கு மகாராஷ்டிரா கடற்கரையில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் அல்லது அக்டோபர் வரை இருக்கும் மழைக்காலத்தில் மும்பையின் வீதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கி, இந்தியாவுக்கு வருடாந்திர மழைப்பொழிவை வழங்குகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு பருவமழையிலும், மழையால் ஏற்படும் குழப்பத்தை சமாளிக்க மும்பை போராடுகிறது. புறநகர் ரயில்கள் பாதிக்கப்பட்டு தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.