This Article is From Aug 21, 2018

திருடனே பர்சைத் திருப்பி ஒப்படைக்கும் வீடியோ: மும்பை போலிசின் சுவாரசியமான எச்சரிக்கை

பதிந்ததில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறுகீச்சுகளையும் (RT) மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பக்குறிகளையும் இக்காணொளி பெற்றுள்ளது

திருடனே பர்சைத் திருப்பி ஒப்படைக்கும் வீடியோ: மும்பை போலிசின் சுவாரசியமான எச்சரிக்கை

மும்பை காவல்துறை முக்கியச் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் சாதுரியமாகவும் நகைச்சுவையாகவும் மிக ஆக்டிவ்வாக ட்விட்டரில் வழங்கிவரும் நவீனமான துறையாகும். அந்த வகையில், பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவன் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவைப் பார்த்ததும் திருடிய பர்சை அதன் சொந்தக்காரரிடமே கொடுத்துக் கைக்குலுக்கும் வீடியோ மக்களைக் கவர்ந்துள்ளது. இதன் இறுதியில், இதுபோல திருடிவிட்டுத் தப்பிக்கலாம் என நினைக்கவேண்டாம் என்று எச்சரிக்கையும் இடம்பெறுகிறது. திங்கள் காலை பதிந்ததில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறுகீச்சுகளையும் (RT) மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பக்குறிகளையும் இக்காணொளி பெற்றுள்ளது.

22 நொடிகள் ஓடும் இவ்வீடியோவில், கூட்டம் மிகுந்த ஒரு கடையில் சாம்பல் நிற உடையணிந்த ஒருவன் பிக்பாக்கெட் அடித்து, திருடிய பர்சை தன் பாக்கெட்டில் வைக்க முயல்கையில் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை கவனிக்கிறான். உடனே இளித்தபடியே கேமராவை நோக்கி மன்னிப்பு கேட்கிறான். பின்னர் கீழே விழுந்த பர்சினை எடுத்துக்கொடுப்பது போல, அதனை அதற்கு உரியவரிடமே ஒப்படைத்துவிட்டு கைக்குலுக்கி விடைபெறுகிறான்.

இறுதியில், “இந்த வீடியோ நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று கூறி திருட நினைப்பவர்களை எச்சரித்துள்ளனர் மும்பை போலீசார்.

சில நாட்களுக்கு முன்பும் இதேபோல கிக்கி சாலஞ்ச் ( #KiKiChallenge ) தொடர்பாகவும் ஒரு விழிப்புணர்வு வீடியோவினை மும்பை போலிசார் ட்வீட் செய்திருந்தனர்.

Click for more trending news


.