This Article is From Apr 14, 2020

'ரமலானில் முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும்' - மத்திய அமைச்சர் வேண்டுகோள்

நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-வரை நீட்டித்துள்ளன. நாளை பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.

'ரமலானில் முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும்' - மத்திய அமைச்சர் வேண்டுகோள்

முஸ்லிம் மத தலைவர்களுடன் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆலோசனை நடத்தினார்.

ஹைலைட்ஸ்

  • முஸ்லிம்களின் புனித ரமலான் மாதம் வரும் 24-ம்தேதி தொடங்குகிறது
  • சிறப்பு பிரார்த்தனைகளை வீட்டிலேயே மேற்கொள்ள அமைச்சர் வலியுறுத்தல்
  • சமூக விலகலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென முக்தர் அப்பாஸ் கோரிக்கை
New Delhi:

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும், சிறப்பு தொழுகைகளையும் முஸ்லிம்கள் வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ள வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக விலகுதல் விதிகளை அரசு வகுத்துள்ளது. அதை கடைப்பிடிக்க வேண்டும். 

சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் கூட்டுத் தொழுகைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய மாநில வக்பு வாரியங்கள் பள்ளிவாசல்கள் மக்கள் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

வக்பு வாரியங்கள், முஸ்லிம் சமூக அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த 8-ம்தேதி ஷபே பராத் இரவு தொழுகையை, முஸ்லிம்கள் வீட்டிலேயே நடத்தினர். இது பாராட்டத்தக்க விஷயமாகும். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து கோயில்கள், மசூதிகள், சர்ச்கள், சீக்கிய குருத்வாராக்கள் உள்ளட்டவற்றில் கூட்டு பிரார்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

வழக்கமாக நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மசூதிகளில் மக்கள் கூடுவார்கள். ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம். எனவே, ரமலானில் முஸ்லிம்கள் அனைத்து நிகழ்ச்சிகள், சிறப்பு தொழுகைகளை வீட்டிலேயே நடத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சிறிய கவனக்குறைவும் கூட நம்மையும், நமது குடும்பத்தையும், சமூகத்தையும்,ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும். எனவே, அரசு வகுத்துள்ள விதிப்படி செயல்பட்டு கொரோனாவை ஒழிக்க முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முன்னதாக அமைச்சர் நக்வி, முஸ்லிம் மத தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் உயர் அதிகாரிகள், வக்பு போர்டு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். 

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம்தேதி முதற்கொண்டு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரமலான் நோன்பு வரும் 24 அல்லது 25-ம்தேதி ஆரம்பம் ஆகிறது. தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30-ம்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன. 

.