This Article is From Aug 07, 2019

35 மசோதாக்கள் நிறைவேற்றம்! 67 ஆண்டுக்குப் பின் திரும்பி பார்க்கவைத்த கூட்டத்தொடர்!

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ம் தேதி, தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இது ஆகஸ்ட் 7 வரை நீட்டிக்கப்பட்டது.

35 மசோதாக்கள் நிறைவேற்றம்! 67 ஆண்டுக்குப் பின் திரும்பி பார்க்கவைத்த கூட்டத்தொடர்!

280 மணி நேரம், 37 அமர்வுகளில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

New Delhi:

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூறும்போது, இந்த கூட்டத்தொடர், 1952ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் முக்கியத்துவம் வாயந்த அமர்வாக இருந்தது என்று கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக மீண்டும் பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இதில் புதிய சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 

ஜூலை 26-ஆம் தேதி உடன் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடையும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டி இருப்பதாக கூறி நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு  நீட்டித்தது. 

இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. குறிப்பாக முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. 

கடந்த 1952-ம் ஆண்டு 64 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் 17-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில், 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கு முன்னதாக பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, 17வது மக்களவை கூட்டத்தொடரில் மொத்தம், 280 மணி நேரம், 37 அமர்வுகளில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், 33 மசோதாக்கள் கீழ் சபையிலும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த மசோதாக்களை நிறைவேற்ற மாலையில் 75 மணி நேரம் அதிகமாக அவை நடந்துள்ளது. 

இந்த கூட்டத்தொடரின் நேரமில்லா நேரத்தில், 1,086 பிரச்சினைகள் குறித்து பெரும்பாலும் புதிய உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. மொத்தமுள்ளள 265 புதிய உறுப்பினர்களில், 229 உறுப்பினர்களுக்கு நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில், மொத்தமுள்ள 46 பெண் எம்.பிக்களில், 42 எம்.பிக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

.