This Article is From Nov 19, 2019

‘இன்னும் ஆலோசனை தேவைப்படுகிறது…’- Shiv Sena உடனான கூட்டணி பற்றி சரத் பவார் ஓப்பன் டாக்!

Maharashtra Government Formation: சிவசேனாவுடன் இரு கட்சிகளும் கூட்டணி வைப்பதில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையே இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

“சேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் சில விஷயங்களில் தெளிவும் ஆலோசனையும் தேவப்படுகிறது”

New Delhi:

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் (Shiv Sena) கூட்டணி அமைப்பது பற்றி, தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவர், சரத் பவாரும் (Sharad Pawar) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் (Sonia Gandhi) இன்று டெல்லியில் ஆலோசனை செய்தார்கள். சந்திப்பு முடிந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பவார், “சேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் சில விஷயங்களில் தெளிவும் ஆலோசனையும் தேவப்படுகிறது,” என்ற சூசகமான பதிலைக் கொடுத்துள்ளார். 

காங்கிரஸ் தரப்பும், “இன்று சோனியா காந்தியைச் சந்தித்த சரத் பவார், மகாராஷ்டிர அரசியல் நிலையைப் பற்றித் விரிவாக விளக்கினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளும் காங்கிரஸ் நிர்வாகிகளும் டெல்லியில் மீண்டும் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்,” என்று கூறியுள்ளது. 

சிவசேனாவுடன் இரு கட்சிகளும் கூட்டணி வைப்பதில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையே இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில் முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பவார், “சிவசேனா - பாஜக கூட்டணி வைத்துத் தேர்தலை சந்தித்தன. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தனியாக கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்தன. இப்படி இருக்கையில் சிவசேனாவுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்பதை எப்படி உறுதிபடி தெரிவிக்க முடியும். அவர்கள், தங்களுக்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் எங்கள் அரசியலில் கவனம் செலுத்துவோம்,” என்று குழப்பமான பதிலைத் தெரிவித்துள்ளார். 
 

8me1euto

இன்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார் பவார்.

தேசியவாத காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளான அஜித் பவார் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோர் மீது சமீபத்தில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைக் காரணமாக வைத்து பவாருக்கு மத்திய அரசு தரப்பு அழுத்தம் கொடுக்கும் என்றும், அதனால்தான் அவர் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முன்னுக்குப் பின்னாக முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் என்றும் மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். 

கடந்த வெள்ளிக் கிழமை பவார், “சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மகராஷ்டிராவில் ஆட்சியமைக்கும். எங்கள் ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்,” என்று உறுதிபட தெரிவித்தார். ஆனால், இன்று மீண்டும் கூட்டணி குறித்து மேலும் பேச்சுவார்த்தை தேவைப்படுகிறது என்கிறார். இதனால் மகாராஷ்டிர அரசியல் களத்தில் தொடர்ந்து குழுப்பமான நிலையே நீடித்து வருகின்றது. 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். 
 

.