டார்ச் லைட்டின் பேட்டரி தீருமா நீடிக்குமா..?- ‘மக்கள் நீதி மய்யம்’ முகாமின் நிலை என்ன? #InsideStory

நாடாளுமன்றத் தேர்தலில், தான் போட்டியிட்ட சில இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்தது மய்யம்

டார்ச் லைட்டின் பேட்டரி தீருமா நீடிக்குமா..?- ‘மக்கள் நீதி மய்யம்’ முகாமின் நிலை என்ன? #InsideStory

கட்சி தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும், அதன் ஒற்றை முகமாக இருப்பது கமல் மற்றும் கமலைச் சுற்றியுள்ள பிம்பம் மட்டுமே

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ‘மக்கள் நீதி மய்யம்' கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சி ஆரம்பித்த மார்க்கத்தில் நடிப்பை கைவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்தார். மார்ச் 10 ஆம் தேதி, லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, “அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் களமிறங்கும்” என்று தடபுடலாக அறிவித்தார். கூடவே இடைத் தேர்தல் குறித்தும் அறிவிப்பு வெளியானது. “நாடாளுமன்றம், சட்டமன்றம் எல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. அரசியலுக்கு வந்துவிட்டால் அனைத்தும் ஒன்றுதான்” என்று இடைத் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். 

avr6ra

கமலும் தேர்தலில் நேரடியாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “எல்லாரும் என்ன ஏன் எலக்‌ஷன்ல நிக்கல நிக்கலனு கேக்குறாங்க. தோ நிக்குறேன்” என்று மேடையில் உரையாற்றி ‘சரியான பதிலடி' கொடுத்தார். கமல் களமிறங்கியிருந்தால் ஒரு இடத்திலாவது மய்யம் வெற்றி பெற்றிருக்கும் என்று ஆருடம் சொன்னார்கள். 

நாடாளுமன்றத் தேர்தலில், தான் போட்டியிட்ட சில இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்தது மய்யம். பல இடங்களில் ‘நாம் தமிழர் கட்சி'-யோடு 3வது, 4வது இடத்துக்குப் போட்டியிட்டது. மொத்தமாக மக்களைவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாங்கிய வாக்கு சதவிகிதம் 3.94.

qgcdemi8

தான் களம் கண்ட முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளதை நினைத்துப் பெருமை கொள்வதா, அல்லது ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதை நினைத்துப் புழுங்குவதா..? மக்கள் நீதி மய்யத்துக்கு, “ஆபரேஷன் சக்சஸ் பட் பேஷன்ட் டெட்” என்பது போன்ற ஒரு நிலை.

கட்சி முகாம் எப்படி இருக்கிறது என்று தலைமைக்கு நெருக்கமான ஒருவரிடம் கேட்டோம். “கட்சியில், ரிசல்ட் குறித்து இரண்டு விதமாகவும் பேசிக் கொள்கிறார்கள். சிலர், ‘முதல் தேர்தல்ல இந்த ரிசல்டே பெரிய விஷயம்தான். நம்ம யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு போடச் சொல்லலை. மாற்றத்தை விரும்பி மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க. அடுத்தடுத்த தேர்தல்ல இன்னும் நிறைய பேர் நமக்கு ஓட்டு போடுவாங்க' என்கின்றனர். ஆனால் இன்னொரு தரப்போ, ‘ஒரு இடத்திலயாவது ஜெயிச்சியிருந்தா நல்லா இருந்திருக்கும்' என்று புலம்புகிறார்கள்” என கட்சி நிர்வாகளிகளின் மன ஓட்டத்தைப் பற்றி விளக்கினார். 

tfockglg

தொடர்ந்து அவர், இந்தத் தேர்தலில் ‘மய்யத்துக்கு' ஏற்பட்ட பின்னடைவு குறித்து விவரித்தார். “கோவை தொகுதிக்கென்றே தனிப்பட்ட முறையில் அறிக்கை வெளியிட்டோம். தென் சென்னையிலும் நன்றாக வேலை பார்த்தோம். இந்த இரண்டு தொகுதிகளில் வெற்றி வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கணிசமான வாக்குகள்தான் கிடைத்தன. கோவையில் செய்தது போன்று அனைத்துத் தொகுதிகளிலும் பணியாற்றியிருக்க வேண்டும். அந்தந்தத் தொகுதிக்கு என்னப் பிரச்னை என்பது குறித்து புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற் போல் தயாராக வேண்டும். அதற்கு நேரம் குறைவாக இருந்தாலும், செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டது பெரிய தவறு.

இன்னொன்று, திமுக போன்ற பெரிய கட்சிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைனில் மிகவும் அதிகப்படியாக வேலை செய்தனர். ஆனால் மய்யத்தின் ஊடகப் பிரிவு அந்தளவுக்குத் துடிப்பாக செயலாற்றவில்லை. இது குறித்து தலைவர் இடத்திலும் நான் வருத்தப்பட்டேன். இன்னும் நிறைய மாற்ற வேண்டியிருக்கிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

dbplgkug

கட்சி தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும், அதன் ஒற்றை முகமாக இருப்பது கமல் மற்றும் கமலைச் சுற்றியுள்ள பிம்பம் மட்டுமே. மய்யத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பற்றி இதுவரை பரவலாக வெளியே தெரியாததே தேர்தலில் ஆக்கட்சிக்குப் பல இடங்களில் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக அடிமட்டத் தொண்டர்கள் சிலர் சொல்கின்றனர். தீர்க்கமான இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் பிரபலமான உள்ளூர் பிரதிநிகள்தான் ஒரு அரசியல் கட்சியின் தொடர் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று தொண்டர்கள் சொல்வதை தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் காது கொடுத்து கேட்க வேண்டிய சூழல் வந்துள்ளது. 

இன்னும் இரண்டே ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. அதற்கு முன்னாலேயே உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. திமுக, அதிமுக தவிர பல கட்சிகளும் களத்தில் மல்லுக்கட்ட உள்ளன. மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் பலமுனைப் போட்டி நிலவுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்குள் தவறுகளை சரிசெய்து கொண்டு மீண்டு வந்தால்தான் ‘பேட்டரி' டவுன் ஆகாமல் இருக்கும்.

df67a4mo