This Article is From Feb 19, 2019

அதிமுகவின் கூட்டணி தொண்டர்களுக்கு எதிரானது: கருணாஸ் காட்டம்!

பாமகவுடன் கூட்டணியில்லை என ஜெயலலிதா கூறிய நிலையில் அதிமுகவின் கூட்டணி தொண்டர்களுக்கு எதிரானது என எம்.எல்.ஏ கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கூட்டணி தொண்டர்களுக்கு எதிரானது: கருணாஸ் காட்டம்!

முன்னதாக இன்று காலையில் சென்னை கிரவுண்ட் பிளாசாவில் அதிமுக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில் அதிமுக - பாமக கூட்டணி இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருகை தந்ததார். மதியம் வரை நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே அதிமுக பாமக இடையே கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அதிமுக பாஜவுடனான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதற்கு அதிமுகவின் தோழமை கட்சிகளான முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எனினும், இதை பொருட்படுத்தாத அதிமுக இன்று பாஜகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்த மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலளார் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ கருணாஸ், ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு எதிரான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் சுயநல கூட்டணி எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி வரக்கூடாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுக அமைத்துள்ள இந்த கூட்டணி மக்கள் நலனுக்கானது அல்ல எனவும் பாமகவுடன் கூட்டணியில்லை என ஜெயலலிதா கூறிய நிலையில் அதிமுகவின் கூட்டணி தொண்டர்களுக்கு எதிரானது என்றார்.

மேலும், அதிமுக சின்னத்தில் போட்டியிட்டதால் எதிர்த்து பரப்புரை செய்ய முடியாது எனவும் சட்ட சிக்கல் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


 

.