This Article is From Apr 17, 2020

"சூ..மந்திரக்காளி' போல 3 நாளில் கொரோனாவே இருக்காது என்கிறார் எடப்பாடி: ஸ்டாலின் கண்டனம்!

கொரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"சூ..மந்திரக்காளி' போல 3 நாளில் கொரோனாவே இருக்காது என்கிறார் எடப்பாடி: ஸ்டாலின் கண்டனம்!

ஹைலைட்ஸ்

  • "சூ...மந்திரக்காளி' போல 3 நாளில் கொரோனாவே இருக்காது என்கிறார் எடப்பாடி
  • பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள்
  • கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள்

"சூ...மந்திரக்காளி' போல 3 நாளில் கொரோனாவே இருக்காது என்கிறார் எடப்பாடி.. அவருக்கு இன்னமும் நோயின் தீவிரம் புரியவில்லையா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக, மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி நேற்று ஆட்சியர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது எனவும், இன்னும் சில நாளில் ஜீரோ ஆகும் எனவும், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இவை இரண்டுக்கும் மத்தியில்தான் மக்களின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

நேற்றைய தினம், தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை ஒழித்துவிட்டதாக தனக்குத் தானே முதுகில் தட்டி முறுவலித்துக் கொள்கிறார். 'இன்னும் இரண்டு மூன்று நாளில் கொரோனாவே இருக்காது' என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். ”நேற்றைய தினம் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், இன்றைய தினம் 25 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியானால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத்தானே அர்த்தம்” என்று கேட்கும் அவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

அவரே சொல்கிறார்; இதுவரை 17 ஆயிரத்து 835 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 1,383 பேரின் முடிவுகள் வரவில்லை என்கிறார். சுமார் 18 ஆயிரம் என்பது தமிழ்நாட்டு மக்கள்தொகையில் எத்தனை சதவிகிதம் என்பதை அவருக்கு அருகில் விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்ல வேண்டும். ஒருவேளை முதல்வர் தனது கையில் மந்திரக்கோல் ஏதாவது வைத்திருப்பாரோ என்று இந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்!

இத்தகைய சூழ்நிலையில் உண்மை நிலையை உணர்ந்து மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையுடன், மற்றவர் உயிர்மீது நெஞ்சில் கொஞ்சம் ஈரத்துடன் செயல்படாமல், "கொரோனா இன்னும் 3 நாளில் ஒழிக்கப்பட்டு ஜீரோவாக ஆகிவிடும்" என்று, “ஏதோ, சூ...மந்திரக்காளி' போல, முதல்வர் சொல்கிறார் என்றால், இவருக்கு இன்னமும் நோயின் தீவிரம் புரியவில்லையா, அல்லது அருகில் இருப்போர் சரியான தகவல்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவில்லையா, என்றுதான் மருத்துவ நிபுணர்கள் கேட்பார்கள்.

நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள்.

நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும். உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.