This Article is From Dec 03, 2019

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னை இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

பல நாட்கள் உழைப்பிற்குப் பிறகு நாசாவின் புகைப்படத்தை ஆராய்ந்து விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளார். அதை நாசாவும் உறுதி செய்து அவரை பாராட்டியுள்ளது. சண்முக சுப்பிரமணியனின் எதிர்காலம் சிறக்கட்டும்” என ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னை இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சண்முக சுப்ரமணியன் நாசாவின் புகைப்படங்களை ஆராய்ந்து, முதல்முறையாக லேண்டர் இருப்பதற்கு சாதகமான அடையாளத்தை கண்டுபிடித்தார். (File)

Chennai:

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய சென்னை பொறியாளர் சண்முக சுப்பிரமணியனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

முன்னதாக, சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. எனினும், விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது குறித்து நாசாவின் விண்கலத்தாலும் கண்டறிய முடியவில்லை. 

இதைத்தொடர்ந்து, நாசா கடந்த செப்.26ம் தேதி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய, லேண்டர் தரையிரங்கும் முன் அதே பகுதியில் எடுத்த புகைப்படங்களையும், இந்த புகைப்படங்களையும் ஒப்பிட்டு அடையாளப்படுத்தும்படி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தது. 

இதையடுத்து, சென்னையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்ற ஐடியில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் நாசாவின் புகைப்படங்களை ஆராய்ந்து, முதல்முறையாக லேண்டர் இருப்பதற்கு சாதகமான அடையாளத்தை கண்டுபிடித்ததாக தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கூறிய இடத்தில் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் என நாசா தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க, நாசாவிற்கு உதவி புரிந்து, தமிழர்களைப் பெருமை கொள்ளச் செய்துள்ள சண்முக சுப்பிரமணியனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “பல நாட்கள் உழைப்பிற்குப் பிறகு நாசாவின் புகைப்படத்தை ஆராய்ந்து விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளார். அதை நாசாவும் உறுதி செய்து அவரை பாராட்டியுள்ளது. சண்முக சுப்பிரமணியனின் எதிர்காலம் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

.