"டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கு திமுக அஞ்சாது!”- ஆர்.எஸ்.பாரதி கைது; ஸ்டாலின் பாய்ச்சல்!

"எடப்பாடி பழனிசாமியின் அரசு அதிகாலை கைது போன்ற கீழ்த்தரமான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவது வெட்கக்கேடானது"

"இதுபோன்ற “சிறுபிள்ளைத்தனமான”, அரைவேக்காட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலம்..."

ஹைலைட்ஸ்

  • இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார் ஆர்.எஸ்.பாரதி
  • திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
  • வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி கைது

சென்னை, ஆலந்தூரில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் இன்று அதிகாலை சென்ற தமிழக போலீசார், அவரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. ஆர்.எஸ்.பாரதியின் கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர், பாரதி மீது புகார் அளித்தருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதனிடையே, தன் மீதான கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ் பாரதி, ‘கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியதாக சமூகவலைதளங்களில் திரிக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த நாளே ஊடகங்களுக்கு முன் அதற்கு பதில் கூறினேன். ஏறத்தாழ 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், இன்று அதிகாலையில் கைது செய்ய வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். 

அதற்கு காரணம் நேற்று மாலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் செய்துள்ள ஊழல் குறித்து புகார் அளித்துள்ளேன். தற்போது கூட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஒரு புகார் தயார் செய்து கொண்டு இருக்கிறோம். அதனை உளவுத்துறை மூலம் எப்படியோ தெரிந்துக்கொண்டு என்னை கைது செய்துள்ளனர். சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது. என் பின்னால் வழக்கறிஞர் அணி உள்ளது. நான் சிறையில் இருந்தாலும், நாளைய தினம் நிச்சயம் எஸ்.பி.வேலுமணி மீது புகார் மனு அளிக்கப்படும். 

கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கூறியும் என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்காக நான் பரிதாபப்படுகிறேன். யாரையோ திருப்திப்படுத்த இந்த அதிகாரிகளை பயன்படுத்தி என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே அதிகாரிகள் இன்னும் சில மாதங்களில் எங்களுக்கு பாதுகாப்பாக வருவார்கள். இதையெல்லாம் ஐந்து முறை பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள்' என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி கைது பற்றி, “மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கைது செய்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை - ‘அன்பகம்' உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி - அது தொடர்பாக திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரிய விளக்கம் அளித்து - மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில், இந்த “அராஜக நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளது. இதே புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இரு வழக்குகள் உயர்நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் - நீதித்துறையைக்கூட மதிக்காமல் அலட்சியம் செய்து, கைது “வெறியாட்டத்தை” எடப்பாடி திரு. பழனிசாமி நடத்தியிருப்பது வெட்கக் கேடானது.

முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது திரு. ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். எடப்பாடி திரு. பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்துள்ள “கொரோனா கால டெண்டர் ஊழல்” மீது விரிவான புகாரை - ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறார். “கொரோனா கால ஊழல்”, “கொரோனா தோல்வி” ஆகியவற்றை மூடிமறைக்க - குறிப்பாக முதலமைச்சர் என்ற நிலையில் தனது ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் “திசை திருப்ப” வேறு வழி தெரியாமல், குரோத எண்ணத்துடன், ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார் எடப்பாடி திரு. பழனிசாமி.

பட்டியலின - பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் - அவர்களின் சமத்துவ - சமூகநீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீர்மிகு பணிகளை, இதுபோன்ற “சிறுபிள்ளைத்தனமான”, அரைவேக்காட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலம் - எடப்பாடி திரு.பழனிசாமியோ, அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் “ரிங் மாஸ்டர்களோ” களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயமாக முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். “அதிகாரம்” மற்றும் “அராஜகத்தின்” துணையோடு நடத்தப்படும் இதுபோன்ற “நள்ளிரவு கைது” நாடகங்களைப் பார்த்தெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம், மிரளாது; நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள்.

கொரோனா என்ற கொடிய வைரசின் தாக்கத்தால் நாடே சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் அரசு அதிகாலை கைது போன்ற கீழ்த்தரமான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவது வெட்கக்கேடானது; கண்டனத்திற்குரியது!”

Listen to the latest songs, only on JioSaavn.com