This Article is From Aug 26, 2019

அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

தமிழக மக்களை, வகுப்புவாத - சாதியவாத வெறியர்களுக்கு இரையாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற - சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இருக்கிறது

அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

மதவெறி - சாதிவெறி சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் தருகிறது.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஒருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் அந்த காரை தீயிட்டுக் கொளுத்தினர். தீயிட்டு கொளுத்திய கும்பல் மீது ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு பேருந்து நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தது. இதனால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவியது. 

இதையடுத்து, உடனடியாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் இன்று காலை புதிய சிலை நிறுவப்பட்டது. இந்த சம்பவத்திற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அறிவுலக மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயல் மிகக் கடும் கண்டனத்திற்குரியது.

நாடு முழுவதும் தலைதூக்கிவரும் சாதி - மத வெறித்தனங்கள், அவற்றிற்கு ஊக்கமளித்திடும் சனாதன சக்திகள், தமிழகத்திலும் அண்மைக்காலமாகத் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டுதான் வேதாரண்யத்தில் நடந்திருக்கும் வேதனை. ஜனநாயக அரசியல் என்கிற முகமூடி அணிந்துள்ள பாசிச சக்திகள் விதைக்கும் விஷ விதைகள் முளைக்கின்ற காரணத்தால் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலைகளை சிதைப்பதும் தலையைத் துண்டித்து ஆனந்தப்படுவதுமான ஆபத்து தொடர் நிகழ்வாகி வருகிறது.

இத்தகைய வன்முறையாளர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களின் கோரவெறியைக் கட்டிப்போட்டுக் கட்டுப்படுத்தும் கடமை உணர்வை மாநில உளவுத்துறை இழந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை பலமாக ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நிகழ்கின்றன. சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும்.

வேதாரண்யத்தில் சிதைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, சீரமைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அங்கு மெல்ல மெல்ல அமைதி திரும்புகிற நல்ல அறிகுறியின் வாயிலாக மதவெறி - சாதிவெறி சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் தருகிறது.

தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட வேண்டிய அவசர அவசியத் தேவையை உணர்ந்து, அதிமுக அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். சுமூகமான நல்லிணக்க வாழ்வை மேற்கொண்டு வரும் தமிழக மக்களை, வகுப்புவாத - சாதியவாத வெறியர்களுக்கு இரையாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற - சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
 

.