This Article is From Mar 30, 2020

பால் விற்பனை, கொள்முதல் வரலாறு காணாத வீழ்ச்சி: இழப்பீடு வழங்க கோரிக்கை

பால் விற்பனை, கொள்முதல் வரலாறு காணாத வீழ்ச்சி காரணமாக நாளொன்றுக்கு 50கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுதால் 30லட்சம் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

பால் விற்பனை, கொள்முதல் வரலாறு காணாத வீழ்ச்சி: இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்தியா முழுவதும் தற்போது முழு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் வேளான் சார்ந்த வர்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்த வண்ணமுள்ளன. குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கின்றது.  

அதில்… “கொரனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 144தடை உத்தரவினால் தமிழகத்தில் 100% தேநீர் கடைகள் முழுமையாக மூடப்பட்டு விட்டன. உணவகங்களிலும் பார்சலுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், 50% சில்லரை கடைகள் மூடப்பட்டு விட்டதாலும், தற்போது மதியம் 2.30மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாலும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனை தற்போது 60% முதல் 70% வரை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.”

“தற்போது தமிழகத்தில் சுமார் 70%வரை பால் விற்பனை சரிவடைந்துள்ளதால் பால் வணிகத்தையும், உற்பத்தியையும் நம்பியுள்ள பால் முகவர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள்  மற்றும் பால் உற்பத்தியாளர்கள் என சுமார் 30லட்சம் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.”

“மேலும் தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களால் நாளொன்றுக்கு சுமார் 2.25கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் சூழலில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் 30லட்சம் லிட்டர் பாலினை மட்டுமே கொள்முதல் செய்து அதில் 25லட்சம் லிட்டர் பாலினை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. மீதமுள்ள பாலினை தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து சுமார் 1.25கோடி லிட்டர் பாலினை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருகின்றன.”

“இந்நிலையில் 144தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் பால் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளதால் நாளொன்றுக்கு சுமார் 1.5 கோடி லிட்டருக்கு மேல் பால் தேக்கமடைந்து வருகிறது. அதுமட்டுமின்றி பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பாலினை பவுடராக்கும் வசதி இல்லாததாலும், பால் பவுடராக்கும் வசதி உள்ள நிறுவனங்களில் பால் பவுடரை இருப்பு வைக்கும் பாலிதீன் கோணிப் பைகளும், பாலில் இருந்து கொழுப்பு சத்தை பிரித்தெடுத்து இருப்பு வைக்கும் வசதிகளும், பாலினை பவுடராக மாற்றும் இயந்திரங்களை இயக்குவதற்கான எரிபொருள், வேதிப்பொருள், மூலப்பொருட்கள் போதிய அளவு இல்லாததும் மற்றும் கொரானா வைரஸ் பீதி காரணமாகவும், அரசின் தடையுத்தரவினாலும் பணியாளர்கள் வருகை பாதியளவிற்கு மேல் குறைந்து விட்டதாலும் பால் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்ய மறுக்கும் சூழல் ஏற்பட்டு பால் உற்பத்தியாளர்களான விவசாயப் பெருமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.”

“இதனால் தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 50கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதே நிலை தொடருமானால் இன்னும் ஓரிரு நாட்களில் சுமார் 80கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.”

”எனவே பால் பவுடராக்கும் வசதி இல்லாத தனியார் பால் நிறுவனங்களிடம் தேக்கமடையும் பாலினை திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் உள்ள பால் பவுடர் தொழிற்சாலையில் பால் பவுடராக மாற்றிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும். அல்லது ஆவின் நிறுவனமே தேக்கமடையும் பாலினை கொள்முதல் செய்து பவுடராக்க வேண்டும்.”

”மேலும், தற்போதைய தடையுத்தரவு காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பால் முகவர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள்  மற்றும் பால் உற்பத்தியாளர்கள் என சுமார் 30லட்சம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்கவும், 144தடை உத்தரவு முடியும் வரை தனியார் பால் நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணம், GST வரி செலுத்துவதில் இருந்தும் விலக்களித்து உத்தரவிட வேண்டும்.” என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இந்த அறிக்கையை வெளியிட்டுளார். 

.