This Article is From Jan 15, 2019

“உ.பி-தான் இந்திய பிரதமரை முடிவு செய்கிறது!”- பிறந்தநாள் பரிசு கேட்கும் மாயாவதி

கடந்த சனிக்கிழமை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தன

பாஜக-வை இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், காங்கிரஸையும் மாயாவதி விட்டுவைக்கவில்லை.

Lucknow:

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் தனது பிறந்தநாள் பரிசாக மாயாவதி, “பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தத் தொண்டர்கள், அவர்களின் பழைய பகைமைகளை மறந்துவிட்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இருவர் தலைமையில் அமையும் கூட்டணிக்கு பெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும். ஏனென்றால் உத்தர பிரதேசம்தான், இந்தியாவின் பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும்” என்று தொண்டர்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். 

அவர் மேலும், “இந்த முறை எனது பிறந்தநாள், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வருகிறது. நாம் இந்த முறை சமாஜ்வாடியுடன் கூட்டணி வைத்துள்ளது பாஜக-வை தூக்கம் இழக்கச் செய்துள்ளது. நமது கூட்டணி வெற்றி பெறுவதே எனது பிறந்தநாளின் மிகப் பெரிய பரிசாக இருக்கும்” என்றுள்ளார். 

கடந்த சனிக்கிழமை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தன. அன்று இருவரும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்கள். அப்போது பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அகிலேஷ், “உத்தர பிரதேசம், நாட்டிற்கு பல பிரதமர்களைக் கொடுத்துள்ளது. இந்த முறையும் உத்தர பிரதேசத்திலிருந்து ஒருவர் பிரதமரானால் நான் சந்தோஷப்படுவேன். நான் யாரைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?” என்று மாயாவதியைப் பார்த்துச் சிரித்தார். 

பாஜக-வை இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், காங்கிரஸையும் மாயாவதி விட்டுவைக்கவில்லை. சனியன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸை விமர்சித்த மாயாவதி, இன்றும் தனது விமர்சனத்தைத் தொடர்ந்தார். 

“நடந்து முடிந்த 5 சட்டமன்றத் தேர்தலில் இருந்து காங்கிரஸ் நிறைய பாடங்களைக் கற்க வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசுகளின் அறிவிப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். போஃபர்ஸ், ரஃபேல் போன்ற ஊழல்கள் பாதுகாப்புத் துறையில் நடக்காமல் இருக்க முறையான அமைப்புகள் இருக்க வேண்டும்” என்று கூறினார். 

.