This Article is From Jul 24, 2019

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.எல்.ஏவை அதிரடியாக நீக்கிய மாயாவதி!

கர்நாடகா சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த மகேஷ் மீது கட்சி ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.எல்.ஏவை அதிரடியாக நீக்கிய மாயாவதி!

நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த மகேஷ் மீது கட்சி ஒழுங்கு முறை நடவடிக்கை

Bengaluru:

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து மாயாவதி அதிரடியாக நீக்கியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருவர் பின் ஒருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா கடிதம் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார். 

இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த பெரும்பான்மை 117லிருந்து 101 ஆக குறைந்தது. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து, கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனால், முதல்வர் பதவியை இழக்கும் நிலையையும் குமாரசாமி அடைந்தார்.

இந்நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏவான மகேஷ் பங்கேற்கவில்லை. முன்னதாக இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று குமாராசாமி தலைமையிலான அரசிற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எம்.எல்.ஏ மகேஷிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். எனினும் இவர் கட்சியின் அறிவுறுத்தலை ஏற்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து விட்டார்.

இதனையடுத்து மாயாவதி மகேஷ் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மாயாவதி பதிவிட்டுள்ளார். அதில், கட்சியின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து கர்நாடகா சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த மகேஷ் மீது கட்சி ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே மகேஷ் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

.